மஹா முனிவர் விசுவாமித்திரர் தான் நடத்த இருக்கும் யாகத்திற்கு பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு ஸ்ரீராமன், லட்சுமணன் இருவரையும் தம்மோடு அனுப்பி வைக்கும்படி மன்னன் தசரதனிடம் கேட்டார். முதலில் மறுத்த தசரதன் பின்பு அனுமதி வழங்க,, அவர்கள் யாகம் செய்ய இருக்கும் காட்டிற்கு அழைத்துச் செல்லும் வழியில் தாடகை என்ற ஓர் அரக்கி குறுக்கிட்டாள். அவளை ஸ்ரீராமன் வதம் செய்தார்.
தசரதன் மகனான ராமன் அயோத்தி அரசராக பதவி ஏற்க இருந்த நிலையில் மாற்றுத்தாய் கைகேயி செய்த சூழ்ச்சியின் காரணமாக 14 வருடங்கள் ராமன் வனவாசம் செல்கிறார். இராமனும், சீதையும் காட்டிற்கு செல்லுகையில், லட்சுமணனும் உடன் செல்கிறான். மூவரும் காட்டிற்கு சென்று முனிவர்களையும், குகனையும் சந்திக்கின்றார்கள்.
குகனை தன்னுடைய மற்றொரு சகோதரன் என்று இராமன் பெருமையாக கூறுகிறார். இராவணனுடைய தங்கை சூர்ப்பணகை இராமனைக் கண்டு காதல் கொள்கிறாள். ஆனால் இராமன் ஏகப்பத்தினி விரதன் என்று பிற பெண்களை ஏற்காமல் இருக்கிறான். லக்ஷ்மண் சூர்ப்பணகையின் மூக்கினை அரிந்து அனுப்புகிறான்.
அதனால் இராவணனிடம் சென்று இராமனின் மனைவி சீதையைப் பற்றியும் அவளுடைய அழகினையும் கூறி, சீதையின் மீது மோகம் கொள்ள வைக்கிறாள் .இராவணன் மாயமானை அனுப்பி இராமனையும், லட்சுமணனையும் சீதையிடமிருந்து பிரித்து, சீதையைக் கவர்ந்து செல்கிறார்.
பிறகு வானரப் படைகளின் உதவியுடன் இராவணனை வீழ்த்தி, இலங்கையில் இருக்கும் சீதையை ராமன் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ படத்தின் மீதிக்கதை
இத்திரைபடத்தில் முக்கிய அம்சங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கும்பகர்ணனின் பிரமாண்ட உருவம், ஜடாயு பறவை, மூலிகைக்காக மலையையே பேத்து எடுத்து வரும் அனுமானின் சாகசங்கள் ஆகியனவற்றோடு போர்க் காட்சிகள் மற்றும் அதில் ஈடுபடும் வானரப் படைகளின் செயல்கள், இந்திரஜித் மற்றும் லட்சுமன் இடையே நடக்கும் வான் சண்டை, இராவணனின் புஷ்பக விமானம், கோட்டை ஆகியன நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ராமர் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருக்கும் செந்தில் குமார், சீதாவுக்கு குரல் கொடுத்திருக்கும் டி.மகேஷ்வரி, ராவணனுக்கு குரல் கொடுத்திருக்கும் பிரவீன் குமார், லக்ஷ்மனனுக்கு குரல் கொடுத்திருக்கும் தியாகராஜன், ஹனுமானுக்கு குரல் கொடுத்த லோகேஷ் மற்றும் ராமாயண கதையை விவரிக்கும் ரவூரி ஹரிதா என அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இராமாயணம் என்னும் பொக்கிஷத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் விதத்தில் 2டி அனிமேஷன் மூலம் பிரமாண்டமான திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் வி.விஜயேந்த்ர பிரசாத்
மொத்தத்தில் ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ பிரமாண்ட படைப்பு
ரேட்டிங் : 3 / 5