Take a fresh look at your lifestyle.

*’திரெளபதி2′ திரைப்படத்தின் ‘எம் கோனே’ பாடல் குறித்து பாடகி சின்மயி தான் பதிவிட்ட ட்வீட்டை நீக்க வலியுறுத்தும் இயக்குநர் மோகன் ஜி!*

6

வெளியாகவிருக்கும் ‘திரௌபதி 2’ படத்தின் முதல் தனிப்பாடலான ‘எம் கோனே’ சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலைப் பாடிய சின்மயி வெளியிட்டுள்ள கருத்தால் பாடலை சுற்றி எழுந்துள்ள விமர்சனங்களுக் இயக்குநர் மோகன் ஜி பதிலளித்துள்ளார்.

இந்த பாடல் வெளியான பின்பு பாடலை பாடிய சின்மயி, மன்னிப்பு கேட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதாவது, அந்த பாடலை பதிவு செய்யும் நேரத்தில் படத்தின் சித்தாந்த பின்னணி குறித்து தனக்குத் தெரியாது என்றும், தெரிந்திருந்தால் பாடலை பாடியிருக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.

சின்மயி வெளியிட்டிருக்கும் இந்தப் பதிவிற்கு இயக்குநர் மோகன்.ஜி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பாடலுக்கு சின்மயி குரலை தனிப்பட்ட முறையில் தான் தேர்ந்தெடுத்ததாகவும், இசையமைப்பாளர் இல்லாமல் பாடல் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், பாடலுக்குத் தேவையான பாணி குறித்து மட்டுமே சின்மயியிடம் விளக்கப்பட்டதாகவும் படத்தின் கருத்தியல் விவரங்களும் விவாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

சின்மயி தன்னிடமோ அல்லது இசையமைப்பாளரிடமோ விளக்கம் கேட்காமல் தனது கருத்தை வெளியிட்டது ஆச்சரியமாக இருப்பதாகவும் சின்மயி தனது கருத்துக்களை தெளிவுபடுத்த வேண்டும் அல்லது ட்வீட்டை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் இயக்குநர் கூறியுள்ளார்.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினரை குறிவைக்க வேண்டாம் என்றும், விமர்சனங்கள் தன்னை மட்டுமே நோக்கி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் மோகன் ஜி. ஒட்டுமொத்த படக்குழுவினரை குறிவைத்து பேசுவது கோழைத்தனம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சின்மயி குறிப்பிடும் முரண்பாடான சித்தாந்தங்கள் பற்றி கேள்வி எழுப்பும் இயக்குநர், உண்மை மற்றும் நம்பிக்கை எனப் பொருள்படும் ‘ஸ்ரீபாதா’ என்ற குடும்பப் பெயரை சின்மயி எதற்காக தனது பெயருடன் இணைத்து வைத்துள்ளார் என்றும், அவர் குறிப்பிடும் சித்தாந்த வேறுபாடுகள் குறித்து அவருக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.