Take a fresh look at your lifestyle.

*“நாங்கள் வாழ்ந்ததாக உணர்ந்த ஒரு கதையைச் சொல்ல விரும்பினோம்” – இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன்!*

3

நஜாய் பிலிம்ஸ் & ஃபிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்கும் ’அங்கம்மாள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று படம் வெளியாகிறது. இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் ஒரு நேர்மையான, கிராமப்புறக் கதையை பெரிய திரைக்குக் கொண்டுவருகிறார். தமிழ்நாட்டு கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்தக் கதைக்களத்தில் ரவிக்கை உடுத்தாத பழக்கம் கொண்டவர் அங்கம்மாள். அவரது மகன் திருமணம் முடிந்த பின்னர் தன்னுடைய மனைவி தாயின் ரவிக்கை அணியாத பழக்கத்தை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று கவலைப்படும்போது குடும்பத்தில் எப்படி மோதல் வெடிக்கிறது என்பதை இந்தக் கதை பேசுகிறது. கேட்பதற்கு சாதாரண விஷயமாகத் தோன்றினாலும் அடையாளம், கண்ணியம், பெண்மை மற்றும் ஒரு குடும்பத்திற்குள் உணர்ச்சிபூர்வமான பேச்சு என மனதைத் தொடும் கடினமான கதையாக இது இருக்கும்.

படம் குறித்து இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “உண்மையாக இந்தக் கதை நடந்த மண்ணிலிருந்தும், மக்களிடம் இருந்து இந்தப் படத்தை உருவாக்க விரும்பினோம். நாங்களும் வாழ்ந்ததாக உணரும் ஒரு படத்தை உருவாக்கியுள்ளோம். அங்கம்மாள் கதாபாத்திரத்தை நடிகை கீதா கைலாசம் மிகவும் திறமையாக பிரதிபலித்துள்ளார். அவர் அந்த கிராமத்தில் வாழ்ந்து அங்குள்ள பெண்களின் ஒவ்வொரு சைகையையும் உள்வாங்கினார். அவரது மிகவும் கண்ணியமான நடிப்பு இந்த படத்தின் ஆன்மா. ’வடசென்னை’ படத்திலேயே சரண் சக்தியின் நடிப்பு மிகவும் பிடிக்கும். இந்தக் கதையின் வலுவான தூணாக தீவிரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் நடிகர் பரணியின் கதாபாத்திரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அவருக்கு சிறப்பு பாராட்டுகள்!

நீண்ட இரவுநேர படப்பிடிப்பு, கணிக்க முடியாத கிராமத்தின் காலநிலை என அனைத்து சூழல்களையும் எங்கள் படக்குழு தைரியமாகவும் நேர்மையுடனும் சந்தித்தது. நாங்கள் எடுத்த மற்றொரு தைரியமான முடிவு சிங்க்- சவுண்ட். இதற்கு படக்குழு மற்றும் நடிகர்கள் என அனைவரிடம் இருந்து முழுமையான ஒத்துழைப்பு தேவைப்பட்டது. இது ஒலியை பதிவு செய்யும் குழுவினருக்கும் சவாலான விஷயம்தான்.

இசை, காட்சிகள் என ஒவ்வொரு துறையின் நோக்கமும் ஒன்றுதான்…அது உண்மை! எங்கள் நோக்கத்தை தயாரிப்பாளர்களும் முழுமையாக ஆதரித்தனர். இந்தக் கதை எளிமையானதாகத் தோன்றினாலும் பாரம்பரியம், அடையாளம் மற்றும் பெருமை ஆகியவற்றை பற்றி ஆழமாகப் பேசும் படமாக வர வேண்டும் என விரும்பினர். அவர்களின் ஆதரவு இல்லாமல், அங்கம்மாள் படத்தை நாங்கள் எடுத்திருக்க முடியாது” என்றார்.

*நடிகர்கள்:* நடிகை கீதா கைலாசத்துடன் சரண் சக்தி, நாடோடிகள் புகழ் பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

திரைக்கதை, இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்,
மூலக்கதை: எழுத்தாளர் பெருமாள் முருகன்,
தயாரிப்பாளர்கள்: கார்த்திகேயன் எஸ், ஃபிரோஸ் ரஹிம் மற்றும் அஞ்சாய் சாமுவேல்,
இணைத்தயாரிப்பு: ஷம்சுதீன் காலித் மற்றும் அனு ஆபிரகாம்,
ஒளிப்பதிவு: அஞ்சாய் சாமுவேல்,
இசை மற்றும் பின்னணி இசை: முகமது மக்பூல் மன்சூர்