தேனிசைத் தென்றல் தேவாவுக்கு ஆஸ்திரிலேய நாடாளுமன்றத்தில் உயரிய மரியாதை
அவைத்தலைவர் இருக்கையில் அமரவைத்து, செங்கோலைத் தந்ததற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு தேவா நன்றி
தமிழ் திரை இசையில் பல சாதனைகளை புரிந்து ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என்று அன்புடன் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவாவை ஆஸ்திரிலேய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் சமீபத்தில் கெளரவித்தது.
ஆஸ்திரிலேயாவிற்கு சென்றிருந்த தேவாவும் அவரது இசைகுழுவினரும் ஆஸ்திரேலேய அரசுக்கு இதற்காக நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தேவா கூறியதாவது: “ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.
எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கௌரவத்தை வழங்கியதற்காக அன்புள்ள திரு. லாரன்ஸ் அண்ணாதுரை மற்றும் ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செப்டம்பர் 24ம் தேதி மாலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டு, மரியாதைக்குரிய செங்கோல் வழங்கப்பட்டது. இந்த தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாச்சாரத்தை பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் இது சொந்தம்.
எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு இந்த பெருமைமிகு தருணத்தில் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் எனது மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது. இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.”