Take a fresh look at your lifestyle.

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் இடையே ஜனவரி இறுதியில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டம்

551

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3 ஆயிரத்து 770 கோடி மதிப்பில் மெட்ரோ ரெயில் சேவைக்கான விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. இதனை கடந்த 2016-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இதில், சுரங்கப்பாதையில் தியாகராஜர் கல்லூரி, தண்டையார்பேட்டை ஆகிய இரண்டு ரெயில் நிலையங்களும், உயர்த்தப்பட்ட பாதையில் புதுவண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடி, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், விம்கோநகர் ஆகிய 6 மெட்ரோ ரெயில் நிலையங்களும் வர உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் பணிகளை முடித்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ஜூன் மாதம் ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்தநிலையில் தற்போது பணிகள் முடிவடைந்து உள்ளன.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோ நகர் வரை விரிவாக்கப்பாதையில் ரெயில் பாதை அமைக்கும் பணி முற்றிலுமாக நிறைவடைந்து விட்டது. இன்று (வியாழக்கிழமை) முதல் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. ரெயில் ஓடும் போது தண்டவாளம் அருகில் உள்ள கட்டுமானங்களில் ரெயில் மோதாமல் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து இன்று டிராலியில் சென்று ஆய்வு செய்ய இருக்கிறோம். வருகிற 25-ந்தேதி டீசல் என்ஜினை இயக்கி தண்டவாளத்தின் உறுதி தன்மை சோதனை செய்யப்பட உள்ளது. 26-ந்தேதி மெட்ரோ ரெயிலை இந்தப்பாதையில் வேகமாக இயக்கி சோதனை நடத்தப்படுகிறது. தொடர்ந்து 27-ந்தேதி ரெயிலில் உள்ள கருவிகளை முறையாக தண்டவாளம் அருகில் உள்ள சிக்னல்களுக்கு ஏற்ப இயக்க முடிகிறதா? என்பது குறித்து சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த பின்னர், ஜனவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் பாதுகாப்பு ஆணையரின் சோதனை நடக்கும். ஜனவரி இறுதியில் ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.