இசைப் பயணத்தின் புதிய மைல்கல்: ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் தமிழக அரசு விருது பெற்ற சாம் CS !!
தமிழக அரசு சார்பில் 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகள் வரை வழங்கப்படும் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் சாம் CS அவர்களுக்கு, 2016-ம் ஆண்டு வெளியான ‘புரியாத புதிர்’ திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் என்ற தமிழக அரசு மாநில விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவமான பின்னணி இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சாம் CS விருது பெற்றிருப்பது, அவரை நேசிக்கும் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து தன் தனித்துவமான பின்னணி இசை மூலம் கவனம் ஈர்த்து வரும் சாம் CS, ‘ஒரு இரவு’, ‘அம்புலி’ போன்ற படங்களின் மூலம் இசைத்துறையில் அடியெடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கைதி, விக்ரம் வேதா, அடங்க மறு, ஆர் டி எக்ஸ், புஷ்பா 2, மஹாவதார் நரசிம்மா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் அவர் உருவாக்கிய த்ரில்லிங் மற்றும் உணர்வுப்பூர்வமான இசை, ரசிகர்களையும் விமர்சகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, ‘புரியாத புதிர்’ படத்தில் கதையின் மனநிலையை நுணுக்கமாக பிரதிபலிக்கும் அவரது இசை, படத்தின் த்ரில்லர் அனுபவத்தை இன்னும் தீவிரமாக்கியதாகப் பாராட்டப்பட்டது. இந்நிலையில், அந்தப் படத்திற்காக தமிழக அரசு சார்பில் அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது, இது அவரது இசைப் பயணத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரமாக அமைந்துள்ளது.
இந்த விருது குறித்து இசையமைப்பாளர் Sam C. S. தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “‘புரியாத புதிர்’ திரைப்படத்திற்கு தமிழக அரசு மாநில விருது வழங்கியிருப்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் ஆழ்ந்த மனநிறைவையும் தருகிறது. ஒரு இசையமைப்பாளராக எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக இந்த விருதை கருதுகிறேன். இது என்னை மேலும் உற்சாகப்படுத்தும் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. இத்தருணத்தில் ‘புரியாத புதிர்’ படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என் திரைப் பயணத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் இசைக்குழுவினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் காலங்களிலும் ரசிகர்களின் மனதைத் தொடும், அவர்களை மகிழ்விக்கும் தரமான படைப்புகளில் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் தொடங்கி இந்தியாவின் பல மொழிகளில் உருவாகும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் உள்ளிட்ட, பல முக்கியமான படைப்புகளில் சாம் CS இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அதில் முக்கியமாக ரவிமோகனின் “கராத்தே பாபு”, கார்த்தியின் “சர்தார் 2′ உள்ளிட்ட பல பிரபலங்களின் டங்களில் பணியாற்றி வருகிறார். இந்த தமிழக அரசு மாநில விருது, அவரது இசைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.