*‘காந்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!*

ஸ்பிரிட் மீட்யா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியார் தயாரித்துள்ள திரைப்படம் ‘காந்தா’. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

கலை இயக்குநர் ராமலிங்கம், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் செல்வமணிக்கு நன்றி. தமிழில் தொடர்ச்சியாக நான் பீரியட் படங்கள்தான் செய்து கொண்டிருக்கிறேன். இயக்குநருடைய ஒரு டாக்குமெண்ட்ரி பார்த்து ஆச்சரியமடைந்து அவருடன் வேலை செய்ய ஆர்வமாக இருந்தேன். சினிமாவுக்குள் சினிமாவை பீரியட் கதையாக காட்டியிருப்பதுதான் ‘காந்தா. சவாலாக இல்லாமல் மிகுந்த ஈடுபாடோடு இந்தப் படத்தில் வேலை செய்தேன். சினிமாவை காதலிக்கும் இயக்குநர் செல்வமணியிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தேவையான சுதந்திரம் கொடுக்கும்போதுதான் அந்தப் படைப்பு வெற்றி பெறுகிறது. அந்த வாய்ப்பும் சுதந்திரமும் கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி” என்றார்.

எடிட்டர் ஆண்டனி கோன்சால்வஸ், “வாய்ப்பு கொடுத்த துல்கர் சார், தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் செல்வா எல்லோருக்கும் நன்றி. ‘காந்தா’ படத்தின் செட் நான் பார்த்தபோதே அசந்துவிட்டேன். எல்லா நடிகர்களும் அசத்தி விட்டார்கள். கதாநாயகி கதாபாத்திரம் நிச்சயம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். சிம்ரன் மேம் போல இவரும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார். இரண்டாவது பாதியில் ராணா சார் வருவார். துல்கர்-ராணா-சமுத்திரக்கனி எல்லோரும் போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள். நான் இதுவரை எடிட் செய்த படங்களிலேயே ‘காந்தா’ படம்தான் மிகவும் சவாலானது. நிச்சயம் இந்தப் படமும் இயக்குநர் செல்வாவும் மிகப்பெரிய இடத்திற்கு செல்வார்கள்”.

ஸ்பிரிட் மீடியா, பிரஷாந்த், “2018ஆம் வருடத்தில் நானும் செல்வாவும் இந்தப் படத்திற்காக இணைந்தோம். எல்லோருக்கும் டிரைய்லர் பிடித்திருக்கும் என நம்புகிறேன். சினிமாவை கொண்டாடும் படமாக இது இருக்கும். உயிரைக் கொடுத்து இதற்காக வேலை பார்த்திருக்கிறோம். நடிப்பு சக்ரவர்த்தியாக துல்கர் படத்தில் அசத்தியிருக்கிறார். ராணா கதாபாத்திரம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். சமுத்திரக்கனி அய்யா கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். பாக்கியஸ்ரீயும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்”.

இயக்குநர் செல்வமணி, “எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமா பார்க்க பிடிக்கும். எந்தப் புத்தகமும் தனி மனிதனும் சொல்லித் தராத பல விஷயங்களை சினிமா சொல்லித்தந்தது. நேற்று இருந்ததை விட இன்று இன்னும் நல்லவனாக இருக்க வேண்டும் என சொல்லித் தந்தது இந்த சினிமாதான். சினிமா நான் விருப்பப்பட்டு பற்றிக் கொண்ட ஆசான். அதனால் என்னுடைய முதல் படமே சினிமா பற்றியதாக எடுத்துக் கொண்டேன். 1950களில் இருந்த ஆளுமைகள், அவர்களுக்குள் இருந்த மனப்போராட்டம் இவற்றை வடிவமைத்து படமாக்கி இருக்கிறேன். என்னைவிட இன்னும் அதிகம் சினிமாவை நேசித்த ஒரு அணி இருந்ததால்தான் என்னால் இந்தப் படத்தை சாத்தியமாக்க முடிந்தது. 2016-ல் நான் எழுதிய இந்தக் கதையை 2019-ல் ராணாவிடம் சொன்னேன். அவருக்கு உடனே பிடித்துவிட்டது. அவர் என் கதையை நம்பியதால்தான் ‘காந்தா’ ஆரம்பிக்க முடிந்தது. ராணாவும் துல்கரும் என் போன்ற புதுமுக இயக்குநருக்கு அமைந்தது பெரிய விஷயம். நாங்கள் எல்லோரும் ரசித்து எடுத்த இந்தப் படத்தை நீங்களும் நிச்சயம் ரசிப்பீர்கள். அய்யா கதாபாத்திரத்திற்கு சமுத்திரக்கனி சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். பாக்கியஸ்ரீ தமிழைக் கற்றுக் கொண்டு சின்சியராக நடித்துள்ளார். தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்த மாதம் 14 ஆம் தேதி படம் வெளியாகிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகர் சமுத்திரக்கனி, “என்னுடைய சினிமா பயணத்தையே ‘காந்தா’ படத்திற்கு முன், பின் எனப் பிரிக்கலாம். ‘சுப்ரமணியபுரம்’ டிரெய்லர் வெளியாவதற்கு முன்னால் எனக்கு காய்ச்சல் வருவது மாதிரி இருந்தது. அதேபோன்ற உணர்வு இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்பும் இருந்தது. சில படங்கள் அப்படியான மேஜிக் செய்யும். காலத்தால் அழிக்க முடியாத இதுபோன்ற படங்களில் நான் இருப்பது பெருமை. என் பிள்ளை மகாதேவன், குமாரி, என் தம்பி ராணா, செல்வாவுடன் பயணப்பட்டது பெருமை. துல்கரின் மகாதேவன் என்ற கதாபாத்திர பெயரை உச்சரிக்கும்போதே எனக்கு அவ்வளவு நிறைவாக இருக்கும். இந்தப் படைப்பு எங்களை இயக்கியது. சினிமா மாறிக்கொண்டிருப்பதை ‘காந்தா’வில் உணர்ந்தேன். இயக்குநர் செல்வா பெரிய இடத்திற்குப் போவார். துல்கர் சிறப்பாக நடித்துள்ளார். பாக்கியஸ்ரீ நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார். நல்ல படைப்பில் இருக்க வேண்டும் என்பது ராணாவின் எண்ணம். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்”.

நடிகை பாக்கியஸ்ரீ, “’காந்தா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம். என்னைப் போலவே இந்தப் படம் பார்த்ததும் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். புதுமுகமான என்னை நம்பி இவ்வளவு பெரிய வாய்ப்பு கொடுத்து ஆதரவு தந்த படக்குழுவுக்கு நன்றி. துல்கர் சல்மான் நடிக்கிறார் என்றதும் அவருக்கு ஈடு கொடுத்து எப்படி நடிக்கப் போகிறேன் என்ற பதட்டம் இருந்தது. ஆனால், எனக்கு முழு ஆதரவு கொடுத்தார். என்னைக் கண்டுபிடித்து வாய்ப்பு கொடுத்த ராணாவுக்கு நன்றி. ‘காந்தா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாவது எனக்கு பெருமை!”.

நடிகர் ராணா, “சிறுவயதில் சினிமா பற்றி நிறைய கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை இந்தப் படம் மூலம் நேரில் இயக்குநர் செல்வா என்னைப் பார்க்க வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு பாக்கியஸ்ரீயை வரவேற்கிறேன். சமுத்திரக்கனி சிறப்பாக நடித்திருக்கிறார். துல்கர் நடிப்பு சக்ரவர்த்தியாக இந்தப் படத்தில் அசத்தியிருக்கிறார். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தக் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். படம் உங்களுக்கும் பிடிக்கும்”.

நடிகர் துல்கர் சல்மான், “இந்தப் படத்தின் கதை 2019ல் தான் கேட்டேன். தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இயக்குநர் செல்வா இருப்பார். சினிமாவை அவ்வளவு ரசிப்பார். இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக காத்திருந்தேன். எங்கள் எல்லோருக்கும் தமிழில் மிக முக்கியமான படமாக ‘காந்தா’ இருக்கும். ‘அய்யா’ கதாபாத்திரத்திற்கு மிகப்பொருத்தமான நபராக சமுத்திரக்கனி இருந்தார். எங்களை விட இன்னும் அதிக ஆர்வமாக சமுத்திரக்கனி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருடன் இணைந்து இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். குமாரி கதாபாத்திரத்திற்காக தமிழ் கற்றுக் கொண்டு முழு ஈடுபாட்டோடு பாக்கியஸ்ரீ நடித்திருக்கிறார். ராணாவும் நானும் இணைந்து இந்தப் படம் செய்திருப்பது மகிழ்ச்சி. படம் நன்றாக வர வேண்டும் என்று ராணா முழு உழைப்பைக் கொடுப்பார். டைம் டிராவல் செய்வது போன்ற மகிழ்ச்சியை இந்த பீரியட் படங்கள் கொடுக்கும். அதை கலை இயக்குநர் ராமலிங்கம் சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு சிறப்பாக உழைத்துள்ளனர். படம் பார்க்கும் அனைவருக்கும் இது மறக்க முடியாத படமாக இருக்கும். நவம்பர் 14 அன்று படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

இசையமைப்பாளர் ஜானு சந்தார், “ஐந்து வருடங்களுக்கும் மேலாக இந்தக் கதையில் செல்வா பயணித்துக் கொண்டிருக்கிறார். ராணா, துல்கர் எல்லோருக்கும் நன்றி. சில படங்கள் மட்டுமே உங்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தைக் கொடுக்கும். இந்தப் படம் அதில் ஒன்று” என்றார்.

#actor dhulgar salman#actor samuthirakani#audio launch#kaantha movie#New film#Tamil movie
Comments (0)
Add Comment