Take a fresh look at your lifestyle.

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி. குமார் மற்றும் ஶ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர் ‘ராஞ்சா’

28

 

இளம் திறமைகளை தேடிக் கண்டுபிடித்து திரையுலகில் அறிமுகம் செய்து அடையாளப் படுத்துவதில் முதன்மையாக திகழும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ‘ராஞ்சா’ எனும் புதிய திரைப்படத்திற்காக ஶ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் உடன் இணைந்துள்ளது.

குறும்படம் இயக்கி கவனத்தை ஈர்த்த சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரஜன் மற்றும் இவானா வருண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். அதிரன் சதீஷ், பத்மன் மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சந்தோஷ் ராவணன், “ஒரு இளம் பெண்ணை மையமாகக் கொண்ட இந்த கதையில் அவளை சுற்றி தொடர் மரணங்கள் நடைபெறுகின்றன. எதனால் அவ்வாறு நடக்கிறது, இதன் பின்னணியில் உண்மையில் இருப்பது என்ன என்பதை விறுவிறுப்பாக சொல்லும் வகையில் ‘ராஞ்சா’ உருவாகி வருகிறது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “காதலின் சக்தி அசாத்தியமானது, அபிரிதமானது. ஆக்கும், காக்கும், அழிக்கும் ஆற்றலை கொண்டது அது. இத்தனை வல்லமை மிகுந்த காதலை புதுமையான கோணத்தில், அதே சமயம் அதன் இயல்பு மாறாமல் திரையில் காட்ட முயற்சித்துள்ளோம்,” என்று தெரிவித்தார்.

‘ராஞ்சா’ படத்திற்கு ‘காலங்களில் அவள் வசந்தம்’ புகழ் ஹரி இசையமைக்க, கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் எடிட்டர் அஷ்வின் ‘ராஞ்சா’ படத்தொகுப்பை கையாளுகிறார்.

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி. குமார் மற்றும் ஶ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராஞ்சா’ திரைப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.