Take a fresh look at your lifestyle.

புத்தம் புது காலை விடியாதா’ வில் பக்கத்து வீட்டு பெண்ணாக நடிக்கும் லிஜோமோள் ஜோஸ்

210

கடந்த 2021ஆம் ஆண்டில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி சிறந்த படமாக தரவரிசையில் முதன்மையான இடத்தை பிடித்த படம் ‘ஜெய் பீம்’ . இப்படத்தைப் பார்வையிட்ட அனைவரின் இதயங்களையும் தன்னுடைய அற்புதமான நடிப்பால் கவர்ந்தவர் நடிகை லிஜோமோள் ஜோஸ். இப்படத்தில் ‘செங்கேணி’ என்ற பிரதான கதாபாத்திரத்தில் நடித்து விமர்சன ரீதியாகவும், வெகுஜன மக்களின் பாராட்டையும் பெற்றவர். இப்படத்திற்குப் பிறகு நடிகை லிஜோமோள் ஜோஸ் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக உருவாகியிருக்கிறார். இவர் அமேசான் ஒரிஜினல் தொடரான ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற தொடரில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட ‘புத்தம் புது காலை விடியாதா’ தமிழ் தொகுப்பின் முன்னோட்டத்தை பார்வையிடும்போது, ஒரு நடிகையாக லிஜோமோள் ஜோஸ் தன்னுடைய திறமையை திறம்பட வெளிப்படுத்தி இருப்பது அனைவருக்கும் தெரியும். இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவான ‘லோனர்ஸ்’ என்ற அத்தியாயத்தில் நடிகை லிஜோமோள் ஜோஸ் ‘நல்லா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொற்றுநோய் காலகட்டத்தில் பிரிந்து சென்ற தீரனை (அர்ஜுன் தாஸ்) மெய்நிகர் திருமண நிகழ்வு ஒன்றில் தற்செயலாக சந்திக்கிறார். இதைத்தொடர்ந்து அவர்களுக்கிடையே ஆழமான- அர்த்தமுள்ள உரையாடல்கள் தொடர்கிறது. இதன்மூலம் அவர்களுக்கிடையே ஒரு பாசப்பிணைப்பை வளர்த்துக் கொள்ளவும், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காலகட்டத்தில் ஒரு பற்றுடன் இருக்கவும் உதவுகின்றன.

நடிகை லிஜோமொள் ஜோஸ் பற்றி இயக்குநர் ஹலிதா சமீம் குறிப்பிடுகையில்,” சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடிகை லிஜோமோள் ஜோஸின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. அப்படத்தின் இயக்குநர் சசி, ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் ஞானவேல், நடிகர் மணிகண்டன் ஆகிய மூவரும் லிஜோமொள் ஜோஸின் நடிப்பை வெகுவாக பாராட்டினர். அதிலும் குறிப்பாக நடிகர் மணிகண்டன் என்னிடம் பேசும்போது, ‘ லிஜோமோள் ஜோஸ் மேடம் நடிப்புக்காக உண்மையாக உழைப்பவர். இதன்காரணமாகவே அவருடன் மீண்டும் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. நாங்கள் இருவரும் விருது வழங்கும் விழாவில் ஒன்றாக கலந்து கொண்ட போது, அவர் தன்னை வெளிப்படுத்திய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிகவும் எளிமையானவர். மற்றவர்களிடம் இயல்பாகப் பழகக் கூடியவர்’ என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து ‘நல்லா’ என்ற கதாபாத்திரத்திற்காக நான் அவரை அணுகியபோது, அவர் திரைக்கதையை முழுவதுமாக வாசித்துவிட்டு, சில காட்சிகளை இப்படி செய்யலாமா..! என செல்போனில் பதிவு செய்து வீடியோ ஒன்றை எனக்கு அனுப்பி வைத்தார். அதை பார்க்கும்போது எனக்கு கண்ணீர் வர ஆரம்பித்தது. அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பைப் பார்த்து நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன். ‘லோனர்ஸ்’ சிங்க் சவுண்ட் எனப்படும் ஒத்திசைவு ஒலி எனும் தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்பட்டது. அவருடைய உச்சரிப்பு மற்றும் வசனங்களிடையேயான ஏற்றத்தாழ்வு அனைத்தும் மிக துல்லியமாக இருந்தது. இதனால் நான் அதனை மாற்றாமல் அப்படியே பயன்படுத்திக் கொண்டேன்.

‘ஜெய் பீம்’ படத்தை பார்த்த பிறகு அவருடைய கடின உழைப்பு மற்றும் முயற்சிக்காக அவரைப்பற்றி பெருமிதம் அடைந்தேன். ‘ஜெய் பீம்’ படத்தில் ‘செங்கேணி’ என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்த லிஜோமோள் ஜோஸ், ‘புத்தம் புது காலை விடியாதா’வில் ‘நல்லா’ என்ற பக்கத்து வீட்டு பெண்ணாக மாறி, அற்புதமாக நடித்துள்ளார். அவரின் இந்த மாற்றத்தை திரையில் காணும் பொழுது சுவராசியமாக இருக்கும்.” என்றார்.

‘புத்தம் புது காலை விடியாதா’ வில் உள்ள ஒவ்வொரு கதையும் தனித்தனியாக இருந்தாலும் நம்பிக்கை, அனுபவ ரீதியான புதிய கண்டுபிடிப்பு, புதிய மனிதர்களின் தொடர்பால் புதிய தொடக்கங்கள் ஆகிய கருப்பொருளால் இவை அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இவையனைத்தும் நம்பிக்கை, காதல் மற்றும் இரண்டாவது வாய்ப்புகள் குறித்து இரண்டாவது லாக் டவுனை மையப்படுத்தி அமைக்கப்பட்ட கதைகளாகும்.

ஐஸ்வர்ய லட்சுமி, அர்ஜுன் தாஸ், திலீப் சுப்பராயன், கௌரி ஜி கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோள் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந்த் மற்றும் டீஜே அருணாச்சலம் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் உள்ள கதைகளை இயக்குநர்கள் பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சட் ஆண்டனி மற்றும் சூர்யா கிருஷ்ணா ஆகியோர் இயக்கியுள்ளனர்.

‘புத்தம் புது காலை’ என்ற முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘புத்தம் புது காலை விடியாதா’ துன்பங்களை எதிர்கொள்ளும் மன உறுதி மற்றும் மன உறுதியை கொண்டாடும் இதயத்தை தூண்டும் கதையுடன் பார்வையாளர்களை மகிழ்விக்க வருகிறது. ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொகுப்பு, 2022 ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் முதல் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.