‘ஹரா’ படத்தின் மூலம் மோகனை மீண்டும் ரசிகர்களுக்கு வழங்கிய விஜய்ஶ்ரீ ஜி, ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷை புதிய படத்தின் மூலம் மறு அறிமுகம் செய்கிறார்
மலேசியாவை சேர்ந்த ஜி வி இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் மலேசிய ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் டத்தோ கணேஷ், அனித்ரா நாயர், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்
வித்தியாசமான கதைக்களங்களையும், சவாலான பாத்திரங்களையும் படைத்து அவற்றில் எதிர்பாராத நடிகர்களை நடிக்க வைப்பதில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி, ‘தாதா 87’ திரைப்படத்தில் சாருஹாசனையும், ‘பவுடர்’ படத்தில் நிகில் முருகனையும், ‘ஹரா’ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் மோகனையும் நடிக்க வைத்தார்.
தற்போது இன்னுமொரு முற்றிலும் மாறுபட்ட முயற்சியாக ‘பன்னீர் புஷ்பங்கள்’ மூலம் 80களில் ரசிகர்கள் இதயங்களில் இடம் பிடித்த சுரேஷை தனது புதிய படத்தின் மூலம் மறு அறிமுகம் செய்கிறார் விஜய்ஶ்ரீ ஜி.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ஒரு பரபரப்பான கதையை பின்னணியாக கொண்டதாகும். மலேசியாவை சேர்ந்த ஜி வி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டத்தோ கணேஷ் மற்றும் விஷால் ஆகியோர் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
சுரேஷை தொடர்ந்து முக்கிய வேடத்தில் மலேசிய ரஜினிகாந்த் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் டத்தோ கணேஷ், அனித்ரா நாயர், தீபா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். ஹரா புகழ் ரஷாந்த் ஆர்வின் இசை அமைக்கிறார்.
படப்பிடிப்பு விரைவில் தொடங்கி இந்தியா மற்றும் மலேசியாவில் நடைபெறவுள்ளது. இப்படத்தின் டைட்டில் டீஸர் ஏப்ரல் 19 அன்று மலேசியாவில் வெளியாகிறது. படத்தின் மீதான ஆர்வத்தை ரசிகர்கள் இடையே இது உருவாக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
*