சிவகங்கை மாவட்டம் மரக்காத்தூர் கிராமத்தில் வசிக்கும் நாயகன் விமலும் சூரியும் நெருங்கிய நண்பர்கள் எந்த வேலைக்கும் செல்லாமல் அக்கா தேவதர்ஷினி குடும்பத்தையும் ஊரையும் ஏமாற்றி அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் குடிப்பது ஊர் சுற்றுவது என சந்தோஷமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் இவர்கள் இருவரின் அட்டூழியத்தை சகித்துக் கொள்ள முடியாத ஊர் மக்கள் பணம் வசூலித்து அதன் மூலம் விமலை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், அங்கு விமல் செய்து வந்த வேலை பறிபோக மீண்டும் சொந்த கிராமத்திற்கு வருகிறார்
இந்நேரத்தில் அக்கிராமத்திற்கு கால்நடை மருத்துவராக வரும் நாயகி ஷ்ரிதா ராவை பார்த்ததும் விமலுக்கு காதல் மலர்கிறது. கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி விமலை ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் விவசாயியான சூப்பர் குட் சுப்பிரமணி தற்கொலை செய்து கொள்கிறார். இதனையடுத்து ஊர் தலைவராக விமல் அதிரடி நடவடிக்கை எடுக்கிறார்.
முடிவில் விவசாயத்தை காப்பாற்ற விமல் எடுத்த அதிரடி முடிவு என்ன ? ஊர் மக்கள் விமலை ஊர் தலைவராக தேர்ந்தெடுக்க காரணம் என்ன? என்பதே ’படவா’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் விமல் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றுபவராக எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், ஆக்ஷன் , ரொமான்ஸ்,செண்டிமெண்ட், காமெடி என இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.
விமலின் நண்பராக நடித்திருக்கும் சூரி, விமலுடன் சேர்ந்து குடி, கும்மாளம் என்று பயணித்து படம் முழுவதும் வருகிறார். கால்நடை மருத்துவராக நடித்திருக்கும் புதுவரவு ஷ்ரிதா ராவ் கதைகேற்றபடி சிறப்பாக நடிக்கிறார் .
விமலின் அக்காவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, மாமாவாக நடித்திருக்கும் நமோ நாராயணன், வில்லனாக நடித்திருக்கும் கே.ஜி.எப் ராம் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமை. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ராமலிங்கம் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
விவசாயத்தை மைய கருவாக வைத்து நகைச்சுவை கலந்து திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கே வி நந்தா.
கருவேல மரங்களால் விவசாயம் பாதிக்கப்படுவதை திரைக்கதையில் அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
ரேட்டிங் – 3 / 5