வித் லவ்- சினிமா விமர்சனம் ஒரு இதமான உணர்வைத் தரும் காதலர் தின விருந்து

வயதான தந்தையிருந்தாலும் திருமண வயது கூடிக்கொண்டே போவதால் அக்கா பார்த்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் நாயகன் சத்யா (அபிஷன் ஜீவிந்த்). தன் அக்கா ஆனந்தி (ஆர்.ஜே ஆனந்தி) மூலம் ஒரு ‘பிளைண்ட் டேட்’ சந்திப்பிற்குச் செல்கிறான். அங்கே அவன் சந்திக்கும் பெண் மோனிஷா (அனஸ்வரா ராஜன்). இருவரும் பேசத் தொடங்கும்போது, அவர்கள் இருவருக்குமே ஒரு பொதுவான ஏக்கம் இருப்பதை உணர்கிறார்கள் அதுதான் ‘முதல் காதல்’. அந்த முதல் காதலை விவரிக்கும் போது தான் இருவரும் திருச்சியில் உள்ள எஸ்டிஏ பள்ளியில் சத்யா சீனியராகவும், மோனிஷா ஜுனியராகவும் படித்தவர்கள் என்பதையறிந்து மகிழ்கிறார்கள். அவர்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் போது, சத்யா அனிஷாவுடன் இருந்த ஒரு தலை காதல் பற்றியும், மோனிஷா வகுப்பில் முதல் மாணவானாக பாலாஜியுடன் இருந்த காதலைப்பற்றியும் தெரிந்து கொள்கின்றனர். அனிஷா திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாய் என்பதையறிந்து கொள்கிறார் சத்யா, அதே சமயம் பாலாஜிப்பற்றி எந்த தகவலும் தெரியாமல் தவிப்பதாக மோனிஷா கூறுகிறார். நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்ளவும், இருவரும் தங்கள் பழைய காதலைத் தேடியும் திருச்சிக்கு ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்குகிறார்கள். சத்யா தனது பள்ளிப் பருவக் காதலியையும், மோனிஷா தனது முன்னாள் காதலனையும் தேடி சந்திக்கத் திட்டமிடுகிறார்கள். இந்தப் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் மனிதர்கள் யார்? அந்த பழைய காதலர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்? கடந்த கால நினைவுகளைத் தேடிச் சென்றவர்களுக்கு நிகழ்காலத்தில் ஒருவருக்கொருவர் மீது காதல் மலர்ந்ததா? இறுதியில் சத்யா யாரைத் திருமணம் செய்துகொண்டார்? மோனிஷாவின் உதவியால் சத்யா தன் தந்தையின் ஏக்கத்தை புரிந்து கொண்டாரா? என்பதே ‘வித் லவ்’ படத்தின் இதமான மனதை வருடும் க்ளைமேக்ஸ்.

நடிகர்களின் பங்களிப்பு:

சத்யாவாக அபிஷன் ஜீவிந்த் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப்பிறகு, இயக்குநராக இருந்து நடிகராக மாறியிருக்கும் அபிஷன், முதல் படத்திலேயே ஒரு “இயல்பான நடிகன்” என்ற நற்பெயரைச் சம்பாதித்துவிட்டார். சத்யா என்ற கதாபாத்திரம் அரேஞ்ச்ட் மேரேஜை விரும்பாத, எதற்கும் உடனே மன்னிப்பு கேட்கும் ஒரு மென்மையான குணம் கொண்ட இளைஞனாக கதாபாத்திரத்திற்குத் தேவையான களங்கமில்லாத அப்பாவித்தனமான முகபாவனைகளை மிகச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, தனது பழைய காதலியைப் பார்க்கச் செல்லும் இடங்களிலும், தனது சகோதரி ஆனந்தியிடம் தன் மனக் குமுறல்களைக் கொட்டும் காட்சிகளிலும் ஒரு தேர்ந்த நடிகராகத் தெரிகிறார். ‘ஒரே நேரத்தில் சிரித்துக் கொண்டே கண்கலங்குவது” போன்ற கடினமான உணர்ச்சிகளை மிக லாவகமாக வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. அனஸ்வரா ராஜனுக்கு இணையாக, எவ்விதத் தடுமாற்றமுமின்றி ஈடுகொடுத்து நடித்துள்ளார். வசன உச்சரிப்பில் இருந்த தெளிவு, அவர் கதாபாத்திரத்தின் நேர்மையை இன்னும் வலுப்படுத்துகிறது. படத்தின் இரண்டாம் பாதியில் வரும் பயணத்தின்போது, பழைய காதலை விட நிகழ்காலத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளும் தருணங்களில், கண்களின் மூலமாகவே தேர்ந்த நடிகரைப் போன்ற பக்குவத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு வெற்றிகரமான இயக்குநராக இருந்துவிட்டு, கேமராவிற்கு முன்னால் வந்து நின்றாலும், எங்கும் “இயக்குநர் மிரட்டல்” தெரியாமல் ஒரு நடிகனாகத் தன்னை முழுமையாக மதன் என்ற இயக்குநரிடம் ஒப்படைத்திருப்பதுதான் அபிஷனின் ஆகச்சிறந்த வெற்றி.

தமிழில் அறிமுகமாகும் முதல் படத்தில் அனஸ்வரா ஏற்றுள்ள மோனிஷா கதாபாத்திரம்,ஒரு துள்ளலான நவீன காலத்துப் இன்றைய பெண்களின் பிரதிபலிப்பு. தெளிவான சிந்தனை, எதார்த்தத்தை எதிர்கொள்ளும் குணம் மற்றும் தனது கருத்துக்களைத் தயக்கமின்றி முன்வைக்கும் ஒரு பெண்ணாக மிக இயல்பாக நடித்திருக்கிறார்.படத்தின் முதல் பாதியில் நாயகனுடன் நிகழும் அந்த ‘பிளைண்ட் டேட்’ உரையாடல்களில், தனது கண்கள் மற்றும் புன்னகையாலேயே ரசிகர்களைக் கட்டிப்போடுகிறார். ஒரு அறிமுக நாயகனுடன் நடிக்கும்போது இருக்க வேண்டிய அந்த ‘கெமிஸ்ட்ரி’ இவரிடம் மிக இயல்பாக வெளிப்படுகிறது.பழைய காதலைத் தேடிச் செல்லும் பயணத்தில், கடந்த கால நினைவுகளை அசைபோடும் காட்சிகளில் அனஸ்வராவின் நடிப்பு மிக நுணுக்கமாக உள்ளது. “காதல் என்பது வெறும் கவர்ச்சியல்ல, அது ஒரு உணர்வு” என்பதை வசனங்கள் இன்றி தனது மௌனத்தின் மூலமே கடத்துகிறார். மிகைப்படுத்தப்பட்ட ஒப்பனையோ அல்லது நடிப்புத் திணிப்போ இன்றி, நிஜ வாழ்க்கையில் நாம் பார்க்கும் ஒரு பெண்ணைப் போலவே திரையில் தெரிகிறார். குறிப்பாக, உணர்ச்சிகரமான தருணங்களில் மிகை நடிப்பைத் தவிர்த்து எதார்த்தமான நடிப்பை வழங்கியிருப்பது அவரது முதிர்ச்சியைக் காட்டுகிறது.படத்தில் இவர் வரும் காட்சிகள் அனைத்தும் ஒரு விதமான ‘ஃப்ரெஷ்’ உணர்வைத் தருகின்றன.அனஸ்வரா ராஜன் தமிழ் சினிமாவிற்கு ஒரு வரப்பிரசாதம்.

இரண்டாம் பாதியில் அனிஷாவாக வரும் காவ்யா அனில், கதையின் போக்கையே மாற்றி படத்திற்கு ஒரு எமோஷனல் வெயிட்டைக் கொடுக்கிறார்.

ஆர்.ஜே ஆனந்தி, ஒரு கலகலப்பான அக்காவாகத் தம்பியின் காதலுக்குத் துணை நிற்கும் காட்சிகளில் எதார்த்தமாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் தேனி முருகன் – சத்யாவின் அப்பா, “கலைமாமணி” சரவணன் – சாமிநாதன், ஹரிஷ் குமார் – தினேஷ், சச்சின் நாச்சியப்பன் – பாலாஜி, சாச்சனா – சந்தியா, டிம்பிள் கண்ணா – விநோதினி, சித்தார்த் – ஜாஃபர் மற்றும் நாயகனின் நண்பர்களாக வரும் நடிகர்கள் அவ்வப்போது கலகலப்பூட்டுகிறார்கள்.

தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு:

ஷான் ரோல்டனின் இசை படத்திற்குப் பெரும் பலம். பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு உணர்வைக் கடத்துகின்றன. பின்னணி இசை காதலின் ஆழத்தை உணர்த்துகிறது. குறிப்பாக 90-களின் ஹிட் பாடலான ‘அவள் வருவாளா’ பாடலைப் பயன்படுத்திய விதம் மற்றும் பழைய பள்ளிப் பருவ நினைவுகளை நிகழ்காலப் பயணத்தோடு கோர்த்த விதம் அருமை.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு,ஃபிளாஷ்பேக் பள்ளி பருவ திருச்சி பயணத்தின் அழகையும், சென்னையின் சந்தடிகளையும் கண்களுக்குக் குளிர்ச்சியாகத் தந்துள்ளது.

சுரேஷ் குமாரின் படத்தொகுப்பு, மெதுவான செல்லும் கதைக்களத்திலும் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொள்கிறது.

கடந்த காலக் காதலின் கசப்பான மற்றும் இனிப்பான நினைவுகளைத் தேடிப் புறப்படும் இருவர், இறுதியில் தங்களுக்குள் இருக்கும் புதிய காதலைக் கண்டறியும் ஒரு மென்மையான, அழகான பயணம். உறவுகளின் சிக்கல்களைப் பேசினாலும், மனதிற்குள் ஒரு இதமான மழையை இறக்கி வைக்கிறது இந்த வித் லவ். வழக்கமான காதல் கதைகளை தவிர்த்து, ‘கடந்த காலக் காதல் ஒரு அழகான நினைவு, ஆனால் நிகழ்காலமே வாழ்க்கை” ,‘காதல் என்பது வெறும் கவர்ச்சியோ அல்லது தியாகமோ அல்ல அது ஒரு புரிதல்” என்ற தத்துவத்தை மிக மென்மையாகக் கையாண்டுள்ளார். காட்சிகளை நகர்த்தும் விதம், குறிப்பாக பயணக் காட்சிகளில் உரையாடல்கள் மூலம் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருப்பது இவரது சாமர்த்தியம். இன்றைய தலைமுறையின் உறவுச் சிக்கல்களைத் தேவையற்ற ஆபாசமோ, அதிரடியோ இன்றி ஒரு கவிதையைப் போல இயக்கியுள்ளார். ஒரு உணர்வைச் சொல்ல காட்சிகளுக்கு அதிக நேரம் கொடுத்து, ரசிகர்களை அந்தச் சூழலோடு ஒன்ற வைப்பது, குறிப்பாக, பெண்கள் தங்கள் கடந்த காலக் காதலை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை ஆழமாகவும், கண்ணியமாகவும் திரையில் கொண்டு வந்துள்ளார். உணர்ச்சிகளை வசனங்களாகச் சொல்லாமல், மௌனம் மற்றும் உடல் மொழியின் மூலமாகவே பல இடங்களை நகர்த்தியிருப்பது இயக்குநர் மதனின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. ஒரு மென்மையான ‘ஃபீல் குட்’ அனுபவத்தைத் தருவதில் நூறு சதவீத வெற்றி கண்டு வாகை சூடியுள்ளார் இயக்குனர் மதன்.

மொத்தத்தில் ஜியான் பிலிம்ஸ் சௌந்தர்யா ரஜினிகாந்த், எம்.ஆர். பி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரித்திருக்கும் வித் லவ் உறவுகளின் சிக்கல்களையும், முதல் காதலின் ஏக்கத்தையும் இன்றைய தலைமுறைக்கு ஏற்ப மென்மையாகப் பேசும் ஒரு இதமான உணர்வைத் தரும் காதலர் தின விருந்து.

Comments (0)
Add Comment