நஜாய் பிலிம்ஸ் & ஃபிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்கும் ’அங்கம்மாள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திறமையான நடிகர்கள் கீதா கைலாசம், சரண் சக்தி மற்றும் ’நாடோடிகள்’ புகழ் பரணி ஆகியோர் இடம்பெற்றுள்ள டிரெய்லரும் படம் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று வெளியாகும் இந்தப் படத்திற்கு ரசிகர்களுடன் படக்குழுவினரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
தைரியம், கருணை மற்றும் தாய்மையின் சொல்லப்படாத நம்பிக்கைகள் ஆகியவற்றை அங்கம்மாள் கதாபாத்திரம் மூலம் தனது நடிப்பில் பிரதிபலித்திருக்கிறார் நடிகை கீதா கைலாசம். தமிழ்நாட்டு கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்தக் கதைக்களத்தில் ரவிக்கை உடுத்தாத பழக்கம் கொண்டவர் அங்கம்மாள். அவரது மகன் திருமணம் முடிந்த பின்னர் தன்னுடைய மனைவி தாயின் ரவிக்கை அணியாத பழக்கத்தை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று கவலைப்படும்போது குடும்பத்தில் எப்படி மோதல் வெடிக்கிறது என்பதையும் இந்தக் கதை பேசுகிறது. பாரம்பரியமும் அசைக்க முடியாத சுயமரியாதையும் கொண்ட பெண்கள் மற்றும் அவர்களின் பெருமை ஆகியவற்றின் வெளிப்பாடாகவும் கதை இருக்கும்.
’அங்கம்மாள்’ படம் குறித்து நடிகை கீதா கைலாசம் பகிர்ந்து கொண்டதாவது, “அங்கம்மாள் கதாபாத்திரமாக மாறுவதற்கு நான் பயமின்றி நேர்மையாக இருக்க வேண்டும். அவளுடைய மௌனத்திற்கும், பெருமைக்கும், இதயத்துடிப்புக்கும் முழுமையாக சரணடைய வேண்டும். அங்கம்மாளை ஊக்கப்படுத்திய மக்களிடையே உண்மையான கிராமத்தில் படமாக்கியதால் ஒவ்வொரு ஃபிரேமிலும் நான் நடிக்கும் முறையே மாறியது. இந்தக் கதையை இவ்வளவு உணர்திறனுடன் வடிவமைத்த இயக்குநர் விபினுக்கு நன்றி! ரிகர்சல் மூலம் அல்லாமல் அந்த கதாபாத்திரத்தை நான் உணர்ந்து நடிக்க அனுமதித்தார். சரண் சக்தி மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் இந்தக் கதையை உண்மையாக உணர வைத்தது. இந்தப் படம் வெளியானதும் பரணியின் நடிப்பு நிச்சயம் பேசப்படும்.
சிங்- சவுண்டுடன் நடிக்க வேண்டியிருந்ததால் படப்பிடிப்பில் நாங்கள் அனைவரும் மிகவும் சின்சியராக நடித்தோம். எங்கள் கேமரா மற்றும் சவுண்ட் டீம் கண்ணுக்குத் தெரியாத கலைஞர்களைப் போல வேலை செய்து, சூழலின் அசல் சத்தத்தை படம் பிடித்துள்ளனர். இந்தப் படம் எங்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் நிச்சயம் புது அனுபவத்தையும் ஒரு தலைமுறையின் வலிமையையும் எடுத்து சொல்லும்” என்றார்.
*நடிகர்கள்:* நடிகை கீதா கைலாசத்துடன் சரண் சக்தி, நாடோடிகள் புகழ் பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
*தொழில்நுட்பக்குழு விவரம்:*
திரைக்கதை, இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்,
மூலக்கதை: எழுத்தாளர் பெருமாள் முருகன்,
தயாரிப்பாளர்கள்: கார்த்திகேயன் எஸ், ஃபிரோஸ் ரஹிம் மற்றும் அஞ்சாய் சாமுவேல்,
இணைத்தயாரிப்பு: ஷம்சுதீன் காலித் மற்றும் அனு ஆபிரகாம்,
ஒளிப்பதிவு: அஞ்சாய் சாமுவேல்,
இசை மற்றும் பின்னணி இசை: முகமது மக்பூல் மன்சூர்