ஜோஷினா பயிற்சிகளும் முயற்சிகளும்: நடிகை ஜோஷினா

சினிமாவில் அதிர்ஷ்டத்தில் அறிமுகம் கிடைக்கலாம்; ஆனால் நின்று நிலைக்கத் திறமை தேவை என்பதில் நம்பிக்கை உள்ளவர் ஜோஷினா. இளைய முகமாக அறிமுகமாக இருக்கும் இவர்,சினிமாவில் ஆர்வம் வந்த பிறகு அதில் நிலைத்து நிற்கும்படியான தகுதியைத் தக்க வைத்துக் கொள்ள உரிய பயிற்சிகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாமல் தனது முயற்சியால் கதாநாயகி வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

அப்படி இவர் தொடர்பு எல்லைக்குள் இருந்து பெற்ற வாய்ப்பு தான் ‘நாட் ரீச்சபிள்’ திரைப்படம். கடும் முயற்சிக்குப் பின் கிடைத்த இன்னொரு வாய்ப்பு தான் ‘மிடில் கிளாஸ் ‘படம்.
அடுத்து ‘துச்சாதனன் ‘ என்கிற படம்.

அடுத்து வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கும் புதிய படமான ‘சூட்கேஸ் ‘படத்திலும் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார்.

தன் சினிமா முயற்சிகள் பற்றி ஜோஷினா பேசும்போது,

“எங்கள் குடும்பத்திற்கும் சினிமாவுக்கும் சம்பந்தமில்லை.சினிமாவில் எனக்குத் தெரிந்தவர் என்று யாரும் கிடையாது.
ஒரு கட்டத்தில் எனக்கு சினிமாவின் மீது ஆர்வம் வந்தது .
தயக்கமின்றி வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தேன் .யாருடைய பரிந்துரையும் இல்லாமல் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன.
என்னுடைய தோற்றத்திற்கு எந்த மாதிரியான வாய்ப்புகள் வருகிறதோ அதை ஏற்றுக் கொண்டு அதில் பிரகாசிக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.அதற்கான முன் தயாரிப்புகளில் நான் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன்.” என்கிறார்.

‘வெற்றியின் ரகசியம் திறமையுடன் உழைப்பதே’ என்று பிராங்க்ளின் சொன்னதை ஜோஷினா மனதில் இருத்தியிருக்கிறார்.

‘திறமையை மிஞ்சிவிடக்கூடிய ஆற்றல் நிலையான பயிற்சிக்கு உண்டு’ என்பதையும் அவர் மறந்துவிடவில்லை.அதனால் சில பயிற்சிகளை எடுத்துள்ளார்.

அப்படி என்ன முன் தயாரிப்புகள் செய்து கொண்டுள்ளார் ?

” சினிமாவிற்கு நடனமாடத் தெரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். நான் பரதநாட்டியம் மட்டுமல்ல சினிமாவுக்கான நடனத்தையும் கற்றுக் கொண்டுள்ளேன்.எனக்குப் பட வாய்ப்புகள் கிடைத்தாலும் மேலும் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் .அதற்காக, கிடைத்த இடைவெளிகளில் நான் சும்மா இருக்கவில்லை.பைக் ரைட், கார் டிரைவிங் கற்றுக் கொண்டேன்.குதிரை ஏற்றம் ,சிலம்பம் கற்றுக் கொண்டேன். இப்படி அடிப்படையான தகுதிகளை நான் அடைந்துள்ளேன்.அதுமட்டுமல்லாமல் கூத்துப் பட்டறை கலைராணி அவர்களிடம் குரல் பயிற்சியும் பெற்றுள்ளேன். திரைப்படத்தில் திரையில் தோன்றும் தோற்றம் போலவே அதற்கு இணையான மதிப்புள்ளது நடிப்பவர்களின் குரல். குரலின் மூலம் ஒரு பாத்திரத்தை மேலும் வலுப்படுத்தலாம்.ஒரு பாத்திரத்துக்கு ஏற்றபடி எப்படிக் குரலை வெளிப்படுத்துவது, அதில் உள்ள நுணுக்கங்கள் என்ன என்பதையெல்லாம் கற்றுக் கொண்டுள்ளேன்.
தெலுங்குப் பட வாய்ப்புகளுக்காகத் தெலுங்கு கற்றுக் கொண்டிருக்கிறேன் .எனக்கு ஒரு தெலுங்குப் பட வாய்ப்பும் வந்துள்ளது.

நான் நடிக்கும் பாத்திரத்தில் நானே பேச வேண்டும்; டூப் போடாமல் நானே நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன்.எனக்கு வரும் வாய்ப்புகளில் என்னை 200% வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காகவே இந்த முன் தயாரிப்புகளையெல்லாம் செய்து கொண்டுள்ளேன்.”என்கிறார்.

ஆக இதுவரை படை திரட்டிக் கொண்டு இருந்தவர், இப்போது போர் தொடுக்க வந்துள்ளார் எனலாம்.

இவர் கல்கியின் பிரபலமான படைப்பான ‘சோலைமலை இளவரசி’ பாத்திரத்திற்காக அதே பெயரில் ஒரு போட்டோ ஷூட் எடுத்து முன்பு தன்னை வெளிப்படுத்தி இருந்தார். அண்மையில் வெளிவந்த ‘காந்தாரா 2’ படத்தின் இளவரசி அதே தோற்றத்தில் இருந்தது கண்டு முதலில் அதிர்ச்சியாகவும் பிறகு ஆச்சரியமாகவும் இருந்ததாகக் கூறுகிறார்.

இப்போது
நடிக்கும் படங்கள்?

“இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள ‘மிடில் கிளாஸ்’ படத்தில் ராதாரவி அவர்களின் மகளாக நடித்திருக்கிறேன்.படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

அடுத்து வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில் ‘சூட்கேஸ்’ படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் சாட்டை யுவன்தான் கதாநாயகன்.
அர்னா ட்ரீம் ஒர்க்ஸ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் மாடியிலிருந்து கீழே விழும் காட்சியில் எந்த வித பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் டூப் போடாமல் நடித்திருக்கிறேன்.
இந்த படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

.’சூட்கேஸ்’ படத்தைப் பொறுத்தவரை பிளாஷ் பேக் காலத்திலும், நிகழ் காலத்திலும் வரும்படியான காட்சிகள் உள்ளன .இரண்டிலும் இரண்டு விதமான பரிமாணங்களைக் காட்டும் வகையான நடிப்பு வாய்ப்புகள் இருந்தன. அதை நான் சிறப்பாகச் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

எஸ் எஸ் ரீல் லைப் கிரியேஷன் நிறுவனத்தின் சார்பில் ராஜேஷ் ஏசுதாஸ் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்கிறேன்.
ஒரு படத்தை இயக்குநர் தமிழ் இயக்குகிறார்.
இது ஒரு கிரைம் திரில்லர்.இந்தப் படத்தின் கதையைக் கேட்டு நடிப்பதற்கு பகத் பாசில் ஒப்புக் கொண்டுள்ளார். தேதிகள் சரியாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். அதே படத்தில் நடிப்பதற்கு ஆடுகளம் கிஷோரும் சம்மதித்துள்ளார். யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது விரைவில் தெரியும்.

இன்னொரு படத்தை இதுவரை படங்களில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்த செம்மலர் அன்னம் இயக்குகிறார் .இது ஒரு பெண்ணை மையப் படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் கதை.
இப்படி நம்பிக்கையான வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை அதிர்ஷ்டத்தில் ஓர் அறிமுகம் வேண்டுமானால் கிடைக்கலாம் . ஆனால் நின்று நினைக்க வேண்டுமென்றால் திறமை இருந்தால் தான் அது சாத்தியமாகும்.வெற்றி பெற்று நிலைத்திருப்பவர்கள் எல்லாருமே அந்த விதியின் அடிப்படையில் தான் பிரகாசித்து வருகிறார்கள்.
அந்த வழியில் செல்லவே நான் விரும்புகிறேன்.
நான் ஒரு இயக்குநரின் நடிகையாக அவர்கள் எதிர்பார்ப்பதை நடிப்பில் வெளிப்படுத்த, தொழில் ரீதியாக அனைத்து தகுதிகளிலும் கொண்டு இருப்பதாக நினைக்கிறேன் “என்கிறார் நம்பிக்கையுடன்.

V. K. Sundar
Bhuvan Selvaraj

#actress Joshina#interview#ungal cinema
Comments (0)
Add Comment