’ஒற்றாடல்’ படத்தை இயக்கிய இயக்குநர் கே.எஸ்.மணிகண்டன், தனது இரண்டாவது படமாக, ‘யாமன்’ என்ற படத்தை எழுதி இயக்கியிருப்பதோடு, கே.எஸ்.எம். ஸ்கிரீன் பிளே பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கவும் செய்திருக்கிறார். சக்தி சிவன், காயத்ரி ரெமா நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஆதேஷ் பாலா, சம்பத்ராம், அருள் டி.சங்கர், திருச்சி சாதானா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. திகில் ஜானர் திரைப்படமான இப்படம், பார்ப்பவர்களை மிரள வைப்பதோடு, வழக்கமான பாணியில் பயத்தாலும் திகில் காட்சிகள் நிறைந்த, சுவாரஸ்யமான பேய் படமாக பயணிக்கிறது, என்று படம் பார்த்த பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் பாராட்டியுள்ளனர்.
இந்த நிலையில், ‘யாமன்’ படத்திற்காக அப்படத்தில் நடித்தவர்களே விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்துள்ளதால், தயாரிப்பாளரும் இயக்குநருமான கே.எஸ்.மணிகண்டன் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் மிகவும் கஷ்ட்டப்பட்டு திரையரங்குகளில் வெளியிட்டுள்ள ‘யாமன்’ படத்தின் காட்சிகளை சில திரையரங்குகள் ரத்து செய்திருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில், 40 பேர் குடும்பத்தோடு படம் பார்க்க சென்ற நிலையில், அங்கிருக்கும் தியேட்டர் ஒன்றில் காட்சி திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தையும் தியேட்டர் நிர்வாகம் தெரிவிக்கவில்லையாம். பொதுவாக 8 பேருக்கு குறைவான டிக்கெட் விற்பனையால் மட்டுமே தியேட்டர் நிர்வாகம் காட்சிகளை ரத்து செய்யலாம் என்ற நிலை இருந்தும், சுமார் 40-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் தனது படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றும் அங்கு திடீரென்று காட்சி ரத்து செய்யப்பட்டது, தனக்கு மிகுந்த கவலையளிக்கிறது, என்று கே.எஸ்.மணிகண்டன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும், இது போன்ற சிறிய படங்களில் நாங்கள் முதலீடு செய்த பணம் திரும்ப வருவதில்லை, அப்படி இருந்தும் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் படம் தயாரித்து, இயக்கியுள்ளேன். நானே என் சொந்த முயற்சியில் தியேட்டர்களில் வெளியிடவும் செய்திருக்கிறேன். இதுபோன்ற நிலையில், எந்தவித காரணமும் இன்றி படத்தின் காட்சியை திடீரென்று ரத்து செய்தது எந்த விதத்தில் நியாயம், இப்படி செய்தால் என்னை போன்ற சிறு முதலீட்டு இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் என்ன செய்வார்கள்?, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ”படத்தில் நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, அவர் நடிக்கும் அனைத்து படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர், ‘யாமன்’ படத்தின் வெளியீட்டின் போது திரையரங்குகளில் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்திக்க அழைத்தேன், முதலில் வருவதாக சொன்னவர், இப்போது சென்னையிலேயே இல்லை, என்று சொல்கிறார். முதலில் படத்தில் நடித்தவர்கள் தங்களது படங்களை பார்க்க வேண்டும், அந்த படம் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதற்கும் சேர்த்து தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால், படம் முடிந்த பிறகு அவர்களுக்கும், அவர்கள் நடித்த படத்திற்கும் சம்மந்தம் இல்லை என்ற ரீதியில் அவர்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற விசயங்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்று என் படம் வெளியாகியிருக்கிறது, ஒரு தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் நான் மட்டுமே தியேட்டர் வாசலில் இருக்கிறேன். ஆனால், நாயகன் சக்தி சிவன், நாயகி காயத்ரி ரெமா, முக்கிய வேடத்தில் நடித்த திருச்சி சாதனா என யாரும் என்னுடன் நிற்கவில்லை. அவர்கள் ஒத்துழைத்திருந்தால் என் படம் நிச்சயம் வெற்றி பெறும். தற்போது படம் பார்த்த மக்களும், பத்திரிகையாளர்களும் பாராட்டுகிறார்கள். படத்தின் நட்சத்திரங்கள் எங்கே என்றும் கேட்கிறார்கள். ஆனால், என் படத்தில் நடித்தவர்களே படம் பார்க்க வராதது வருத்தமாக இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்களை காப்பாற்ற முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதேஷ் பாலா பேசுகையில், “கே.எஸ்.மணிகண்டன் படத்தை இயக்கி, தயாரிக்கவும் செய்திருக்கிறார். அதனால் தான் அவருக்கு இவ்வளவு எமோஷனலாக பேசுகிறார். நான் இந்த படத்தில் சிறு வேடத்தில் தான் நடித்திருக்கிறேன். எனக்கு படம் முடியும் போது தான் வாய்ப்பு கொடுத்தார். சிறிய வேடமாக இருந்தாலும், என்னால் இந்த படத்திற்காக எவ்வளவு ஒத்துழைப்பு கொடுக்க முடியுமோ அதை கொடுத்து வருகிறேன். சிறிய படம், பெரிய படம், சிறிய வேடம், பெரிய வேடம் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. நான் நடிக்கும் ஒவ்வொரு வேடங்களையும் என் வெற்றியாக நினைத்து கொண்டாடி வருவதோடு, என் பெற்றோர்களுக்கு அந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். அப்படி தான் இந்த படத்தையும் பார்க்கிறேன். இதில் நடித்ததோடு ஒரு பாடலையும் பாடியிருக்கிறேன். முதலில் பாட மறுப்பு தெரிவித்தேன், ஆனால் இயக்குநரின் வற்புறுத்தலால் பாடினேன். அந்த பாடலை திரையில் காட்சியுடன் பார்க்கும் போது மிக பிரமாண்டமாக இருக்கிறது. ரசிகர்கள் கொண்டாடும் ஹிட் பாடலாக மாறியிருக்கிறது. அந்த பாடல் மூலம் எனக்கு தொடர்ந்து பாட்டு பாடும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாடுவேன். ‘யாமன்’ சூப்பரான ஹாரர் படம். நிச்சயம் ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கிறது, நன்றி.” என்றார்.
சோசியல் மீடிய பிரபலமும், இளம் நடிகையுமான ஹரினி படம் குறித்து கூறுகையில், “இயக்குநர் என் நண்பர் என்பதால் ‘யாமன்’ படம் பார்க்க வந்தேன். படம் சிறப்பாக இருக்கிறது. படத்தில் நடித்தவர்களே இன்று படம் பார்க்க வராதது வருத்தமாக இருக்கிறது. படத்தில் படுக்கையறை காட்சிகளும், கிளுகிளுப்பான காட்சிகளும் இருந்தால் தான், அந்த படத்திற்கு பப்ளிஷிட்டி கிடைக்கிறது. பெரிய படங்களுக்கு அப்படி இல்லை என்றாலும், சிறிய படங்களில் இதுபோன்ற கவர்ச்சியான விசயங்கள் இருந்தால் மட்டுமே, அந்த படம் மக்களிடம் சேருகிறது. அந்த வகையில், இந்த படம் குடும்பத்துடன் பார்க்கும்படியும், திகில் படங்களை விரும்புகிறவர்களுக்கு பிடிக்கும்படியும் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், படத்தை விளம்பரப்படுத்த இதில் நடித்தவர்களே வராமல் இருப்பதற்கு என்னை பொறுத்தவரை இது தான் காரணமாக இருக்கும். திருச்சி சாதனா சோசியல் மீடியாக்களில் ஆபசாமாக பேசுவார், வீடியோக்கள் பதிவிடுவார். ஆனால், அவரை அப்படி காட்டாமல் நாகரீகமாக காட்டி ஒரு நடிகைக்கான அங்கீகாரம் படத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் அவரும் வரவில்லை என்றால் என்ன சொல்வது. படத்தில் நடிக்காத நாங்கள், இந்த படத்தை விளம்பரப்படுத்த இங்கு வந்திருக்கிறோம். எங்களைப் போன்று படத்தில் நடித்தவர்களும் வர வேண்டும், அப்படி வந்தால் மட்டுமே சிறிய படங்கள் வெற்றி பெறும்.” என்றார்.