’டெஸ்ட்’ – விமர்சனம்

YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் எஸ். சஷிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் நடிப்பில் ’டெஸ்ட்’ திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் இணைய தளத்தில் வெளியாகி இருக்கிறது.

கேன்டீன் வைத்திருப்பதாக கூறி தண்ணீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கும் மாதவன், தனது கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்குகிறார். இவரது மனைவி நயன்தாரா தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார்.

திருமணம் நடந்து பல வருடங்கள் ஆகிய நிலையில் குழந்தை செல்வம் இல்லாமல் மனவேதனையில்  இருக்கிறார் நயன்தாரா. அதற்கான இறுதி முயற்சியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்கிறார்.

மற்றொரு பக்கம் கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான சித்தார்த் கடைசியாக நடந்த  சில போட்டிகளில் சரியான முறையில் விளையாடவில்லை என்பதால் அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு புதியவருக்கு வாய்ப்பு கொடுக்க நாசர் தலைமையிலான கிரிக்கெட் வாரியம் முடிவு செய்கிறது.

கிரிக்கெட் வாரியத்தின் முடிவை ஏற்க மறுக்கும்  சித்தார்த் சென்னையில் நடக்கும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான கடைசி டெஸ்ட்  போட்டியில் சிறப்பாக விளையாடி தன் திறமையை வெளிப்படுத்த நினைக்கிறார் .
இறுதியில் மாதவன் கண்டுபிடிப்பிற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதா? மருத்துவ சிகிச்சை எடுக்கும் நயன்தாராவிற்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததா? சித்தார்த் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே ’டெஸ்ட்’ படத்தின் மீதிக்கதை.

மாதவன்.நேர்மறை மற்றும் எதிர்மறை கதாபத்திரத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பில்  தனது லட்சியத்தை அடைய எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவராக வித்தியாசமான கதாபாத்திரத்தில்  சிறப்பாக நடிக்கிறார்

ஆசிரியராக வரும் நயன்தாரா குழந்தைக்காக ஏங்கும் கதாபாத்திரத்தில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கிரிக்கெட் வீரராக நடித்திருக்கும் சித்தார்த் முன்னணி கிரிக்கெட் வீரராக இருக்கும் போது கிடைக்கும் பாராட்டுகளும் சரியாக விளையாட வில்லையென்றால் அவர்கள் மனநிலை என்ன என்பதை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சித்தார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் மீரா ஜாஸ்மின் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சக்திஸ்ரீ கோபாலனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. விராஜ்சின்கோலியின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாண்டமாக உள்ளது.

கிரிக்கெட், சூதாட்டம் , ஏற்றத் தாழ்வு , மனிதர்களின் மனநிலை ஆகியவற்றை மைய கருவாக வைத்து  வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அதற்கான முயற்சியை கடைசி வரை மேற்கொள்ள வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ். சஷிகாந்த்

ரேட்டிங்  : 3.5 / 5

Comments (0)
Add Comment