Take a fresh look at your lifestyle.

எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும் – யுவன் சங்கர் ராஜா

15

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. மெலடி மற்றும் பிஜிஎம் கிங் என்று ரசிகர்களால் அறியப்படும் யுவன் இசைத்துறையில் தனக்கென ரசிகர் பட்டாளத்தையும், தனி பாதையையும் அமைத்துக் கொண்டுள்ளார். இவர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கோட் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தி கோட் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார். அப்போது, “எல்லோருக்கும் வணக்கம், உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு “தோல்வியில் இருந்து வெற்றி” அதைப் பற்றித் தான் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.”

“ஆரம்பத்தில் நான் இசைமயைத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நான் இசையமைக்கும் படங்கள் எல்லாமே தோல்வியடையும் என்று முத்திரை பதித்தனர். அதன்பிறகு நான் தனி அறையில் அமர்ந்து, கதவை பூட்டிக் கொண்டு அழுது கொண்டிருப்பேன். எங்கு தவறு நடந்தது என்று யோசிப்பேன். சில நாட்கள் கழிந்தன. பிறகு மீண்டும் இசையமைக்க துவங்கினேன். இப்படித் தான் இங்கு உங்கள் முன் நிற்கிறேன். இதில் உள்ள யோசனை என்னவென்றால், பேசுகிற வாய் பேசிக் கொண்டே தான் இருக்கும், நாம் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.”

“எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது. எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் அவை எதற்கும் செவி சாய்க்கக்கூடாது. உங்கள் தலை நிமிர்ந்த படி எல்லாவற்றையும் கடந்து வர வேண்டும். இதனால் தான் என்னால் இத்தனை ஆண்டுகள் இந்தத் துறையில் நீடித்து நிற்க முடிகிறது. எனக்கு வரும் கருத்துக்கள், பேச்சுகள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தால், இத்தனை ஆண்டுகள் பயணித்திருக்க முடியாது. என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும். நல்ல இசை மற்றும் பாசிட்டிவிட்டிக்கு மட்டுமே என் காதுகள் திறந்திருக்கும். உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றிகள்,” என்று பேசினார்.