Take a fresh look at your lifestyle.

‘சீயான்’ விக்ரமின் ‘தங்கலான்’ படக் குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா

13

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து, இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரைகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம்… வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் தங்கலான் படத்திற்கு, ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் வழங்கிய ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக் குழுவினர் விழா ஒன்றினை ஒருங்கிணைத்திருந்தனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த நன்றி தெரிவிக்கும் விழாவில் தயாரிப்பாளர் நேகா ஞானவேல் ராஜா, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனஞ்ஜெயன், நடிகர் விக்ரம், இயக்குநர் பா. ரஞ்சித், விநியோகஸ்தர் சக்திவேலன் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் நேகா ஞானவேல் ராஜா பேசுகையில், ” ‘தங்கலான்’ கோல்டன் வெற்றி. இதை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா. ரஞ்சித் – விக்ரம்- ஜி வி பிரகாஷ் குமார்- உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடித்த நடிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. தங்கலான் திரைப்படம் தெலுங்கிலும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. அங்கு தற்போது அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ ” என்றார்.

கதாசிரியரும், எழுத்தாளருமான அழகிய பெரியவன் பேசுகையில், ” தங்கலான் படத்தில் பணியாற்றியது… எனக்கு சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்.‌ நெருப்பாற்றில் நீந்தி வெற்றி பெறுவது என்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ரஞ்சித் அவர்கள் வெறுப்பாற்றலின் நீந்தி வெற்றி பெற்றிருக்கிறார்.‌ இதுவரைக்கும் எந்த திரைப்படங்களுக்கும் எதிரும் புதிருமான விமர்சனங்கள், விவாதங்கள் ,கருத்துக்கள் வந்ததை நான் பார்த்ததில்லை.‌ இது ஒரு தனித்துவமான முத்திரையை பதித்த படைப்பு. ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவில், ‘இந்தப் படம் ஒரு வரலாற்றின் முக்கியமான படம் என்று குறிப்பிட்டிருந்தேன்’. தற்போது உலகம் முழுவதிலிருந்து பலரும் தங்கலானை பற்றி பேசுகிறார்கள். இதுபோன்ற பேச்சுகளை இதற்கு முன் நான் கேட்டதில்லை.‌ இதற்கு முழு காரணம் இந்த படத்தில் பேசப்பட்ட விசயம். அதில் காண்பிக்கப்பட்ட வரலாறுகள்.. குறியீடுகள். ..

இதைக் கடந்து இந்தப் படத்தை நான் எப்படி பார்க்கிறேன் என்றால்… ஒரு அசலான எளிய மனிதனின் தகிக்கும் கோபம் இதில் இருக்கிறது. அந்த கோபம்தான் உரிமைக் குரலாக மாறி இதில் ஒலித்தது.

இந்த படத்தின் இயக்குநரான பா. ரஞ்சித் மீது எனக்கு எப்போதும் ஒரு மதிப்பும் , மரியாதையும் உண்டு. இதை விட பேரன்பும் உண்டு.

படப்பிடிப்பு தளத்தில் நான் சென்று இருந்த போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த நடிகர்கள் அனைவரும் அற்புதமான மனிதர்கள். குறிப்பாக விக்ரம் மாபெரும் உழைப்பை இந்த படத்தில் கொட்டி இருக்கிறார்.‌ அனைவருக்கும் மனதின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

விநியோகஸ்தர் சக்தி வேலன் பேசுகையில், ” தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு கடினமான காலகட்டமாக இருந்தது. இருந்தாலும் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்து, இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்தார்.

அதன் பிறகு படத்தின் பணிகள் நிறைவடைந்த உடன் முழுமை அடையாத முதல் பிரதியை அவர் காண்கிறார். அந்த தருணத்தில் என்னையும் அழைத்து இருந்தார்.‌ படத்தை முழுமையாக பார்த்த பிறகு பத்து நிமிடம் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் எனக்கு தெரியவில்லை. அவருடைய பார்வை என்னவென்று தெரிந்து கொண்டு பேசலாம் என்று காத்திருந்தேன்.

ரஞ்சித் ஒரு படத்தில் பணியாற்றும் போது முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார் என்பது தெரியும். ஆனால் ஒரு ஹீரோ.. விக்ரம் ..ஒரு கலைஞராக மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார். இதை நாம் மிகச் சரியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும். விக்ரமின் நடிப்பு அவரின் அர்ப்பணிப்பு.. அதைப் பார்த்து தயாரிப்பாளருக்கு பேச்சே வரவில்லை. இந்தப் படத்தை சரியான தேதியில் சரியாக விளம்பரப்படுத்தி வெளியிட வேண்டும். ரசிகர்களை சென்றடைய செய்ய வேண்டும்.‌ இப்படி செய்யும் போது தான்.. ஒரு படத்திற்காக ஒரு நடிகர் அர்ப்பணிப்புடன் உழைத்ததை ஒரு தயாரிப்பாளராக கொண்டு போய் சேர்க்க முடியும் என்றார் .

இதைத்தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு பருத்தி வீரனுக்கு பிறகு ஒரு காவிய படைப்பு தங்கலான் தான் என்றும் சொன்னார்.

விக்ரம் இந்தப் படத்தின் ஜீவன். ஒரு கலைஞனாக இவ்வளவு பெரிய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கியிருக்கிறார்.

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் நான்கு நாட்களில் 68 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.

ரசிகர்கள் இயக்குநரை இயக்குநராகத்தான் பார்க்கிறார்கள். அவர் மீது அளவற்ற அன்பை செலுத்துகிறார்கள். பா. ரஞ்சித் சக மனிதன் மீது அளவற்ற அன்பும் அக்கறையும் கொண்ட ஒரு இயக்குநர்.‌ அவருக்கு சமுதாயத்தின் மீது அக்கறையும், மக்கள் மீது அன்பும் இருக்கிறது. இதுதான் அவருடைய படத்திலும் பிரதிபலிக்கும்.

தங்கலான் திரைப்படத்திற்கு தமிழக முழுவதும் மிகச்சிறந்த தொடக்கம் கிடைத்தது.

‘ஒரு படத்திற்காக ஒரு படக் குழு இவ்வளவு கடினமாக உழைப்பார்களா..! இந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பார்களா..! இந்த வருடத்தில் நடிப்பிற்காக என்னென்ன விருதுகள் இருக்கிறதோ… அவை எல்லாம் விக்ரமிற்கு வழங்கிட வேண்டும். இயக்குநருக்கு என்னென்ன விருதுகள் இருக்கிறதோ அவை எல்லாம் ரஞ்சித்திற்கு வழங்கிட வேண்டும்’ என ஆந்திராவில் உள்ள ஒரு திரையரங்க உரிமையாளர் என்னிடம் ஆர்வத்துடன் சொன்னார்.

கடினமான விசயத்தை எடுத்துக்கொண்டு மக்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்ற படம்தான் தங்கலான். இந்தப் படத்தை காவிய படம் போல் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், ” ‘தங்கலான்’ படத்தின் வெற்றி விழாவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

திரைப்படங்கள் ஏன் எடுக்க வேண்டும்? என்ற சிந்தனையுடன் திரையுலகில் நுழைந்தேன். இந்தக் கேள்வியுடன் தான் என்னுடைய திரைப் பயணம் தொடர்ந்து நீண்டு கொண்டிருக்கிறது.

இந்தப் பயணத்தில் உருவான தங்கலான் முக்கியமான விவாதத்தையும், முக்கியமான வெற்றியையும் தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றியை அளித்த அனைவருக்கும் நான் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெற்றி சாதாரணமானதல்ல.‌ பழக்கப்பட்ட மொழியில் ஒரு படைப்பை வழங்குவது எவ்வளவு கடினமோ… அதைவிட பழக்கமே இல்லாத ஒரு மொழியில் ஒரு படைப்பை வழங்கி அதனை வெற்றி பெற வைப்பது என்பது கடினமானது.‌ மக்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கடத்த வேண்டும். எனக்குள் இருக்கும் அகத்தை இந்த படைப்பிற்குள் வெளிப்படுத்த வேண்டும். நான் மக்களிடம் பேச வேண்டும் என்று நினைத்த விசயத்தை இதில் சொல்லி இருக்கிறேன். இதனை என் அளவில் சரியாகப் புரிந்து கொண்டு அதை கொண்டாடி வரும் எண்ணிலடங்கா ரசிகர்களுக்கும், மக்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி. இந்த படத்தை பற்றி ஆரோக்கியமான விவாதம் முன்னெடுக்கப்பட்டு இருப்பதை கண்டு நாம் சரியான படடைப்பை தான் வழங்கி இருக்கிறோம் என்ற மிகப் பெரிய மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

என்னுடைய இந்த வெற்றியில் பலர் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று நான் இந்த மேடையில் நிற்கிறேன் என்றால்.. அதற்கு என்னுடைய கடின உழைப்பு தான் காரணம். நான் உழைப்பதற்கு என்றுமே அசராதவன். நான் உழைப்பது… கடினமாக உழைப்பது…என்பது பெரிய விசயமல்ல. ஆனால் என்னைப் போலவே சிந்திக்கும் நிறைய நபர்களுடன் இந்தப் படத்தில் இணைந்து
பணியாற்றிருக்கிறேன். அவர்களில் ஒவ்வொருவருக்கும் இந்த தருணத்தில் என்னுடைய சிறப்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மீது தீரா அன்பும், காதலும் கொண்டு இந்த படத்திற்காக பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் என் மீது காட்டிய அன்பும் காதலும் எனக்கு கூடுதலான பொறுப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.‌ இவர்களுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் எனக்குள் உருவாக்கியிருக்கிறது.

இவர்கள் காட்டும் அன்பும் ஆதரவும் என்னை தொடர்ந்து உற்சாகமாக இயங்கச் செய்கிறது. சில தருணங்களில் சிலரிடமிருந்து வன்மம் எழத்தான் செய்யும். ஆனால் வன்மத்திற்கு பதில் தருவதை விட… ஏனெனில் வன்மத்திற்கு பதில் அளித்தால் நாம் அங்கேயே தேங்கி விடுவோம். அதனால் அதைவிட அதிகமாக அன்பு காட்டும் ரசிகர்களுக்காக என் பாதையில் செல்ல தீர்மானித்திருக்கிறேன்.

ஒரு படைப்பாளிக்கு.. ஒரு திரைப்பட இயக்குநருக்கு.. ஏன் இவ்வளவு பேரன்பும்.. காதலும்.. என எனக்கு புரியவில்லை. என்னை ஏன் இவர்கள் இவ்வளவு கொண்டாடுகிறார்கள்? தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் ஆந்திராவில் இருந்தும் எனக்கு ஏன் ஆதரவு தருகிறார்கள்?. இன்னும் படமே வெளியாகாத மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இருந்தும் என்னை ஏன் கொண்டாடுகிறார்கள்?

இதற்கு ஒரே பதில்… படைப்புகளின் மூலமாக நான் பேசும் கருத்துகள் தான் முதன்மையானதாக கருதப்படுகிறது. கவனிக்கப்படுகிறது. மேலும் அதில் உள்ள கலைத்திறன்கள் தான் கவனிக்க வைக்கின்றன. நாம் செய்யும் வேலையில் தனித்துவம் இல்லை என்றால்… நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். நான் என் படங்களில் பேசும் கருத்து… இடம்பெற செய்திருக்கும் சிந்தனை… மக்களுடன் மக்களுக்காக பகிர்ந்து கொள்ளும் அன்பு… இதனை சரியாகப் புரிந்து கொண்ட பல லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இதனால் எனக்கு எந்த கவலையும் இல்லை. இதுதான் தங்கலான் படத்திற்கு வெற்றியை கொடுத்திருக்கிறது. மேலும் இது எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் அளித்திருக்கிறது.

இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய எழுத்தாளர் அழகிய பெரியவனுடன் பெரிய விவாதம் நடைபெற்றது. அவர் குறிப்பிடும் சில விசயங்கள் உணர்வுபூர்வமானவை . ஆனால் அதனை திரைக்கதையில் எப்படி அமைப்பது என்பது குறித்து நான் தனிப்பட்ட முறையில் சிந்தித்தேன். அது தொடர்பான பயணம் என்னுள் நீடித்தது. அது மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பயணம். அதிலிருந்து தான் அனைத்தும் இயங்குகிறது என நான் நினைக்கிறேன்.

இந்த விசயத்தில் என் அலைவரிசையை சரியாக புரிந்து கொண்டு தமிழ் பிரபாவும் பணியாற்றினார். அழகிய பெரியவன் எழுதிய வசனங்களை அவர் தனக்கே உரித்தான வட்டார வழக்கு மொழியில் எழுதினார். அவருடைய இந்த நுட்பமான பணி தான் … அதாவது கதாபாத்திரங்கள் பேசும் வசன உச்சரிப்பு தான் இந்த படத்தை மேலும் உயிர்ப்புள்ளதாக்கியது என நான் நினைக்கிறேன்.

இந்தத் திரைப்படம் காலத்தைக் கடந்து பொக்கிஷமாக இருக்கும். அதற்கான அனைத்து விசயங்களும் இதனுள் இருப்பதாக நான் கருதுகிறேன்.

இந்தப் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது மூவர் அதில் ஒருவர் ஜி வி பிரகாஷ். அவருடைய உழைப்பு பிரமிக்கத்தக்க வகையில் இருந்தது. படத்தின் அனைத்து விமர்சனங்களிலும் தவறாது ஜீவியின் பெயரும் இடம் பெற்றது. இந்த தருணத்தில் அவருக்கும், அவருடன் பணியாற்றிய குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது நபர் ஞானவேல் ராஜா. இவரை மட்டும் நான் சந்திக்காமல் இருந்தால் என்னுடைய திரை பயணம் மிகவும் கடினமானதாக இருந்திருக்கும். என் திரை பயணத்தை எளிதானதாகவும் இலகுவானதாகவும் மாற்றியது அவர் தான். அவருக்கு நான் என்றென்றும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். அட்டக்கத்தி படத்தின் வெளியீட்டிற்கு பிறகு அந்த நிறுவனத்தில் நான் இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தமானேன். அதில் ஒன்று ‘மெட்ராஸ்’. மற்றொன்று தான் ‘தங்கலான்’. இந்தப் படத்தை பெரிய அளவில் வெளியிடுவார் என்ற நம்பிக்கை அவர் மேல் எனக்கு இருந்தது. அதை இன்று சாத்தியமாக்கி கொடுத்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது கூட அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘தயாராக இருங்கள். மிகப்பெரிய முன்னணி நட்சத்திரத்துடன்‌ இணைந்து விரைவில் பிரம்மாண்டமான கமர்சியல் படம் ஒன்றில் பணியாற்றலாம். உங்களது கடின உழைப்பின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் உங்களுடைய ரசிகன்’ என நம்பிக்கையுடன் பேசி இருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு… இந்த அளவிற்கு… திரையரங்கத்திற்குள் ரசிகர்களையும், மக்களையும் கவர்ந்து இழுத்து வந்தவர்.. இந்தப் படத்தின் இன்றைய வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் விக்ரம் சார் மட்டும்தான்.

இதுவரை எனக்கு புரியாத புதிராக இருப்பது இவர் ஏன் என்னை இவ்வளவு தூரம் நம்பினார் என்று..? இதுவே எனக்கு பயத்தையும் அளித்தது. எவ்வளவு இயக்குநர்கள்… எவ்வளவு வெற்றிகள்… எவ்வளவு கதாபாத்திரங்கள்… எவ்வளவு ரசிகர்கள்… கொண்டிருக்கும் இவர் ஏன் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்? என நான் நினைத்திருக்கிறேன். அவர் ஏன் இது போன்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்தார்? இதற்கான அவசியமும், தேவையையும் அவருக்கு என்ன? என்பது எனக்கு புரியாமல், அவரிடமே நேரடியாக கேட்டேன்.

இத்தனை வெற்றிகளை ருசித்து இருக்கிறீர்கள்… எது உங்களை இந்த அளவிற்கு கடினமாக உழைக்க வேண்டும் என்று தூண்டுகிறது? ஏன் இது போன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறீர்கள்? உங்களைப் போன்ற நட்சத்திர நடிகர்கள் தங்களுடைய சௌகரியமான எல்லையில் இருந்துதான் படத்தில் நடிப்பார்கள்.

அதற்குப் பின் தான் புரிந்தது. அவர் தன்னுடைய ரசிகர்கள் மீதும், சினிமா மீதும் வைத்திருக்கும் மிகப்பெரிய காதல் தான் காரணம் என புரிந்தது. அது அவருடைய தீராத போராட்ட குணமாகத்தான் நான் பார்க்கிறேன். அதனால்தான் பல பரிணாமங்களை உடைய கதாபாத்திரங்களை தேடி தேடி நடித்து வரும் வேட்கை உடைய நடிகராக இருக்கிறார். இவருடைய நடிப்பிற்கு தீனி போடுவது என்பது பெரும் சவாலான விசயம். அவருடைய நடிப்பிற்கு தங்கலான் சரியான தீணியை வழங்கி இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இது போன்ற திறமை வாய்ந்த நடிகருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியான விசயம். அவருடன் இணைந்து பணியாற்றியதை ஒரு அனுபவமாகவும், பாடமாகவும் நினைக்கிறேன். அவருடனான பயணம் எனக்கு நல்ல படங்களை உருவாக்குவதற்கு உதவும் என நம்புகிறேன். அவர் எனக்கு செய்த பெரிய விசயத்தை அவருக்கு நான் எப்படி திருப்பி செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.‌ இருந்தாலும் அவருக்கும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

நடிகர் விக்ரம் பேசுகையில், ” அனைவரும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த படத்தை தொடங்கும் போது.. இது போன்ற ஒரு கதை. இது போன்றதொரு மக்கள். இது போன்றதொரு வாழ்க்கை. அந்த காலகட்டத்தில் மக்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு .. இன்னல்கள்.. சவால்கள்.. என பல விசயங்களை எதிர்கொண்டு தங்கத்தை தேடுகிறார்கள். எல்லாத்தையும் மீறி அவர்களுக்கு தங்கம் கிடைக்கிறது. எட்டாத ஒரு விசயத்தை…சுலபமாக கிடைக்காத ஒரு விசயத்தை … கஷ்டப்பட்டு வாங்க வேண்டியதாக இருந்தது. இந்தப் படத்திற்கான எங்களின் பயணமும் இப்படி தான் இருந்தது. படத்தில் நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தோம். இந்த படத்தில் யாரும் நடிக்கவில்லை. அந்த கதாபாத்திரமாகவே வந்திருக்கிறார்கள்.‌ நாங்கள் அனைவரும் நடித்திருந்தால் அந்த மக்களின் உண்மையான கஷ்டம் புரியாமல் இருந்திருக்கும். அந்தக் காலகட்டத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்களோ.. அதேபோல் நாங்களும் மாறிவிட்டோம். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த தங்கலான் குடும்பமும்… கஷ்டப்பட்டோம். அனைத்திற்கும் இறுதியாக தங்கத்தை கண்டுபிடித்தோம். அதுதான் இந்த படத்தின் வெற்றி. இதற்காக நாங்கள் அனைவரும் ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

ரஞ்சித் என்னை சந்தித்து கதையை சொல்லும்போது ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என சொன்னார். முதலில் தலையில் கொஞ்சம் முடியை அகற்ற வேண்டியது இருக்கும் என்றார். அதன் பிறகு பாதி மொட்டை அடிக்க வேண்டும் என்றார். பிறகு சிறிது நேரம் கழித்து நீங்கள் கோவணம் கட்ட வேண்டும் என்றார்.

முன்னணி நட்சத்திர நடிகர்கள் யாரும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நிறைய யோசிப்பார்கள். இதைக் கேட்டதும் முதல் எனக்கு தூக்கி வாரி போட்டது.‌ மற்றொருபுறம் எனக்குள் ஒரு பயமும் இருந்தது. மறுபுறம் இதனை மட்டும் சரியாக செய்து விட்டால்.. எப்படி இருக்கும் என்ற ஒரு பிரமிப்பும் இருந்தது. ஆனால் இதனை ரஞ்சித் கேட்டதால்… ஒப்புக்கொண்டேன். அவர் கேட்டால் நான் ஆதாமாகவும் நடிக்க தயார்.

ஆனால் சில இயக்குநர்கள் இருக்கிறார்கள் அவர்களை நம்பி பணியாற்றலாம்.‌ என்னை உருவாக்கியது இயக்குநர்கள் தான்.

படப்பிடிப்பு தளத்தில் முதல் நாள் மட்டும் கோவணம் கட்டிக் கொண்டு நடிக்கும் போது சிறிது கூச்சம் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த கதாபாத்திரமாக மாற மாற .. அந்த மக்களின் வாழ்வியலுக்குள் சென்று விட்டோம். இந்த மேஜிக்கை நிகழ்த்தியது ரஞ்சித் தான். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ரஞ்சித் இல்லை என்றால் நான் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கவே முடியாது. இது போன்றதொரு சவாலான வேடத்தை.. வழங்கியதற்காகவே ரஞ்சித்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

விநியோகஸ்தர் சக்திவேலன் சொன்னது போல் ஜனரஞ்சகமான கமர்சியல் படங்களில் நடித்து விடலாம். ஆனால் இது போன்ற பல அடுக்குகளை கொண்ட கதாபாத்திரத்தில்.. அதையும் ஜனரஞ்சகமாக உருவாக்கி மக்களிடத்தில் சென்றடையச் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல.‌

எனக்கும் இயக்குநர்களுக்கும் எப்போதும் ஒரு தொடர்பு இருக்கும்.‌ பாலா சார்.. ஷங்கர் சார்..
மணி சார்.. ஹரி.. தரணி.. என அனைத்து இயக்குநர்களிடமும் சினிமா கடந்த ஒரு நட்பு இப்போது வரை தொடர்கிறது. மெட்ராஸ் படத்திலிருந்து ரஞ்சித் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது அது இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. அவர் எனக்கு தங்கலானை கொடுத்ததற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இதற்கு முன் பல படங்களில் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். ஆனால் தங்கலான் படத்தில் ஒரு உண்மை இருந்தது. ரஞ்சித்தின் ஆழ்ந்த சிந்தனை அதில் வெளிப்பட்டது. இது சாதாரண படம் அல்ல. இந்தப் படத்தில் பல விசயங்கள் பேசப்பட்டிருக்கிறது. படத்தைப் பார்க்கும் அனைவரையும் ரஞ்சித் சிந்திக்க வைத்திருக்கிறார்.‌.‌

அடுத்ததாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இது போன்றதொரு படத்தை தயாரிப்பதற்கு துணிச்சல் வேண்டும். அதற்காக அவருக்கும், இந்த மேடைக்கு வருகை தந்திருக்கும் நேகா ஞானவேல் ராஜாவுக்கும் நன்றி.

கதாசிரியர் அழகிய பெரியவன் – எழுத்தாளர் தமிழ் பிரபா – கவிஞர் மௌனம் யாத்ரிகா – பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர்கள்- என்னுடைய உதவியாளர்கள்- படத்தினை விளம்பரப்படுத்தும் போது உடன் வருகை தந்து பணியாற்றிய குழுவினர்- என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்து விட்டால்.. அந்தப் படத்திற்காக இரண்டு ஆண்டுகள் சென்றுவிடும். என்னுடைய ரசிகர்கள் எப்போதும் என்னிடம் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.‌ ரசிகர்களுக்காக ஒரே சமயத்தில் ‘மகான்’ , ‘கோப்ரா’ , ‘பொன்னியின் செல்வன்’ என மூன்று படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டேன். எல்லா படத்திலும் அதே கெட்டப் அதே ஹேர் ஸ்டைல். ஆனால் அதில் எனக்கு என்ன சவால் இருந்தது என்றால்.. ஒரே கெட்டப்பில் மூன்று படங்களிலும் வெவ்வேறாக நடிக்க வேண்டும். இந்த சவால் எனக்கு மிகவும் பிடித்த விசயமாக இருந்தது.

சில படங்கள் சில நேரத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெறுவது இல்லை. அது ஏன் என்பது நமக்கு தெரிவதில்லை. ஆனால் அந்தப் படங்களில் இடம்பெறும் சில காட்சிகளில் நன்றாக நடித்திருந்தேன். அந்தப் படம் வெற்றி பெறாததால் மக்களை சென்றடையவில்லை. அதனால் இந்த படம் வெற்றியைப் பெற்ற போது அதற்காக நாங்கள் பட்ட கஷ்டத்தை ரசிகர்கள் உணர்கிறார்கள்.‌ பாராட்டுகிறார்கள்.

‘மகான்’ திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியானது. ஆந்திராவில் அதற்கான ரசிகர்கள் கூட்டம் இருந்ததை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

தங்கலான் படத்தின் வெற்றி.. ரசிகர்கள் எனக்கு கொடுத்த ஊக்கம்.‌ இந்த வெற்றியை ரசிகர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். ” என்றார்.