கிராமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ் ராஜகோபாலனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
இசை மேதைகளான ஜாகிர் ஹுசைன் மற்றும் ஜான் மெக்லாலின் தலைமையிலான சக்தி குழுவினரின் சமீபத்திய படைப்பான ‘திஸ் மொமென்ட்’, சிறந்த உலகளாவிய இசை ஆல்பத்திற்கான கிராமி விருதை வென்றது.சென்னையைச் சேர்ந்த கணேஷ் ராஜகோபாலன், தனது சகோதரர் குமரேஷுடன் இணைந்து கணேஷ் குமரேஷ் என்ற பெயரில் இசைப்பணியை செய்து வருகிறார். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இத்துறையில் கோலோச்சி வரும் அவரது பங்களிப்பு இந்திய பாரம்பரிய இசையில் அழியாத முத்திரையை பதித்துள்ளது.இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் எம்.எம். கீரவாணி போன்ற முன்னணி திரை இசை அமைப்பாளர்களுடனும் கணேஷ் பணியாற்றி உள்ளார். மதிப்புமிக்க சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.கிராமி வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கணேஷ், சக்தி இசைக்குழுவிற்கு நன்றி தெரிவித்தார். “ஜாகிர் ஹுசைன் மற்றும் ஜான் மெக்லாலின் போன்ற மேதைகளோடு இணைந்து இந்திய பாரம்பரிய இசையை உலகளாவிய ரசிகர்களுக்காக நாங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம் எங்கள் முயற்சிகளுக்கு மகுடம் வைத்தது போன்று கிராமி விருது கிடைத்துள்ளது,” என்றார் அவர்.
இசைக் கலைஞர், இசையமைப்பாளர், கல்வியாளர், ஈஸ்வரா மியூசிக் பள்ளியின் நிறுவனர் என்று பன்முகம் கொண்ட கணேஷ் ராஜகோபாலன் தொடர்ந்து பேசுகையில்: “கிராமி விருது பெற்ற குழுவில் ஷங்கர் மகாதேவன், செல்வகணேஷ் மற்றும் நான் என தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் உள்ளோம். இது எங்களுக்கு மட்டுமில்லாது தமிழகம் மற்றும் இந்தியாவுக்கே பெருமை. ஜாகிர் ஹுசைன் மற்றும் ஜான் மெக்லாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், எனது இசைப் பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைத்து கலைஞர்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தெரிவித்தார்.
இசை எல்லா எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை வலியுறுத்திய அவர், பல்வேறு இடங்களில் இருந்த சக்தி இசைக்குழுவின் கலைஞர்களால் கோவிட் காலகட்டத்தின் போது கிராமி விருது பெற்ற ஆல்பமான ‘திஸ் மொமென்ட்’ உருவாக்கப்பட்டது என்று கூறினார்.