Take a fresh look at your lifestyle.

’பீட்சா 3’ விமர்சனம்

110

நடிகர்கள் : அஸ்வின் கக்குமானு, பவித்ரா மாரிமுத்து, கவுரவ், காளி வெங்கட்
இசை : அருண் ராஜ்
ஒளிப்பதிவு : பிரபு ராகவ்
இயக்கம் : மோகன் கோவிந்த்
தயாரிப்பு : சி.வி.குமார்

நாயகன் அஸ்வின் கக்குமானு சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது காதலியான நாயகி பவித்ரா மாரிமுத்து ஆவிகளிடம் பேசுவதற்கான ஆப் ஒன்றை உருவாக்கி வருகிறார். இவர்களின் காதலுக்கு பவித்ராவின் அண்ணனான போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரவ் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, பவித்ராவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதற்கிடையே, அஸ்வின் நடத்தும் உணவகத்தில் இரவு நேரங்களில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதோடு, அஸ்வினை சுற்றி பல மர்மமான மரணங்கள் நிகழ்கிறது. அதற்கு அஸ்வின் தான் காரணம் என்று நினைக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரவ், அவரை கைது செய்வதற்கான ஆதாரங்களை திரட்டி வர, அஸ்வின் தன்னை சுற்றி நடக்கும் மர்மங்களுக்கு பின்னணி என்ன என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்குகிறார். அவர் அந்த உண்மைகளை எப்படி கண்டுபிடித்தார், அவருக்கும் அவரது உணவகத்தில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு, என்பதை திகிலாக சொல்வது தான் ‘பீட்சா 3’.

நாயகன் அஸ்வின் கக்குமானு தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை முழுமையாக செய்திருக்கிறார். தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களால் குழப்பமடைந்து, கோபமடையும் போது நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பவித்ரா மாரிமுத்து, காளி வெங்கட், அனுபமா குமார், அபி நக்‌ஷத்ரா, கவுரவ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

பிரபு ராகவின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளில் மிரட்ட வைத்திருப்பதோடு, திகில் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

அருண் ராஜின் இசை படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது. குறிப்பாக பேய் வரும் காட்சிகளில் பீஜியம் நமக்கு பயத்தை உண்டாக்குகிறது.

சிறுமிக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை திகில் பின்னணியில் சொல்லியிருக்கும் இயக்குநர் மோகன் கோவிந்த், சில இடங்களில் தடுமாறியிருந்தாலும், திருப்திகரமான திகில் படத்தை கொடுத்திருக்கிறார்.

படத்தின் முதல் பாதி முழுவதும் கதையை சொல்லாமல் இழுப்பது ரசிகர்களின் பொருமையை சோதித்தாலும், இரண்டாம் பாதியில் சரியான பாதையில் பயணித்து ரசிகர்களை சீட் நுணுயில் உட்கார வைத்து படம் ரசிகர்களை ரசிக்க வைத்து விடுகிறது.

ரேட்டிங் 3/5