Take a fresh look at your lifestyle.

‘அரிமாபட்டி சக்திவேல்’ – திரைப்பட விமர்சனம்!

110

லைஃப்  சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் அஜீஷ்- பி பவன் கே தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ‘அரிமா பட்டி சக்திவேல்’. . இப்படத்தில் சார்லி, பவன், மேக்னா எலன், இமான் அண்ணாச்சி, அழகு, சூப்பர் குட் சுப்பிரமணி, சேதுபதி, ஜெயச்சந்திரன் மற்றும் பல நடித்து  இருக்கின்றனர். கதை எழுதி இயக்கி இருப்பவர் ரமேஷ் கந்தசாமி.

அரிமா பட்டி என்ற ஊரில் நடக்கும் முக்கிய சம்பவத்தை மையமாக வைத்து கதை எழுதி படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அரிமா பட்டி என்ற ஊரில் ஜாதி மாறி வேறு ஜாதியில் எந்த ஒரு பெண்ணையோ, ஆண்களையோ திருமணம் செய்து கொண்டால், அந்த குடும்பத்தையே ஊர் பஞ்சாயத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள். இந்த சூழ்நிலையில் அரிமா பட்டியை சேர்ந்த பவன், பள்ளியில் தன்னுடன் படித்த மாற்று ஜாதியை சேர்ந்த ஒரு பெண்ணை அதாவது மேக்னா எலனை காதலித்து,  யாருக்கும் தெரியாமல் சில நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டு,  அந்த கலப்பு திருமணத்தை ரிஜிஸ்தார் அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு சென்னைக்கு சென்று விடுகிறார். இந்நிலையில் ஜாதி வெறி பிடித்த மேக்னா எலெனின் அண்ணன் பிர்லா போஸ் தன் தங்கையை காதல் திருமணம் செய்து கொண்ட பவனை கொல்ல துடிக்கிறார். இதனை கேள்விப்பட்ட அரிமா பட்டி ஊரில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் மாற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட பவனின் தந்தை சார்லியை பஞ்சாயத்தில் நிறுத்தி பல கேள்விகளை கேட்கின்றனர்.

ஊர் மக்கள் மத்தியில் என்ன சொல்வதென்று புரியாமல் தலை குனிந்து வேதனையில் தவிக்கிறார் சார்லி. அப்போது பஞ்சாயத்து தலைவர்கள் மாற்று ஜாதி பெண்ணை பவன் திருமணம் செய்து கொண்டதால்,  இனிமேல் இந்த ஊர் மக்களின் உறவுகள் வேண்டுமென்றால் உன்னுடைய மகனுடன் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் பேசக்கூடாது.  சொத்து எழுதி அவனுக்கு தரக்கூடாது. அவனை எந்த காரணத்தை கொண்டும் உன் வீட்டிற்கு வர வைக்க கூடாது… என்று பலவித கட்டுப்பாடுகள் விதித்து பவனின் தந்தை சார்லியை வேதனைப்பட வைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த ஊர் மக்கள் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற தண்டனையும் விதிக்கிறார்கள். இதனால் வேதனை அடைந்த பவனின் தந்தை சார்லி தன் மகனுக்காக ஊரில் உள்ள அனைவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் பவன், இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்து தன் தந்தையை சந்திக்க அரிமா பட்டி ஊருக்கு வருகிறார். அப்போது அந்த ஊரில் உள்ள சிலர் பவனை அடித்து அந்த ஊரை விட்டு போய் விடுமாறு சொல்கின்றனர்.. ஆனால் பவன் தன்னை அடிக்க வந்த அனைவரையும் அடித்து வீழ்த்தி, அந்த ஊரை விட்டு வெளியேறுகிறார். இந்நிலையில் ஜாதி வெறி பிடித்த மேக்னா எலெனின் அண்ணன் பிர்லா போஸ் தன் தங்கையை காதல் திருமணம் செய்து கொண்ட பவனை பழிவாங்க முயற்சிக்கும்போது, அச்சமயத்தில் பவன் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு அவரை கொல்ல ரவுடிகளை அனுப்புகிறார்.. ஜாதி வெறி பிடித்த பிர்லா போஸ் தன் தங்கையையும், பவனையும் பழிவாங்கினாரா? ஊர் பஞ்சாயத்தார் கொடுத்த தண்டனையை  ஏற்றுக் கொண்ட சார்லியின் கதி என்னவாயிற்று? என்பது தான் ‘அரிமாபட்டி சக்திவேல்’ படத்தின் மீதி கதை.

இப்படத்தில் கதாநாயகனாக  சக்திவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவன்.  கதையை அவரே எழுதி படத்தையும் தயாரித்து இருக்கிறார்.  அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் கதை உண்மையில் இவர் வாழ்க்கையில் நடந்தது என்பதால் அவரே அந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்திருக்கிறார். காதல், பாசம், வேதனை, ஆக்ரோஷம் ஆகிய அனைத்து உணர்வுகளையும் திறம்பட வெளிப்படுத்த நினைத்தாலும் முயன்றிருந்தாலும்  சில காட்சிகளில் நடிக்க தெரியாமல் தவித்திருக்கிறார்.

கதாநாயகி கவிதாவாக மேகனா எலென் நடித்திருக்கிறார். இளமையுடன், அழகு பதுமையாய் காட்சியளிக்கும் அவர் தன் உடலை குறைப்பதற்க்கு உடற்பயிற்சி செய்தால், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பை பெறுவார் என்பதில் ஐயமில்லை. இவர் தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ப அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பவனின் தந்தையாக சார்லி நடித்திருக்கிறார். யாரையும் எதிர்த்து பேசாத அப்பாவி தந்தை கதாபாத்திரத்தை ஏற்று, தன் இயல்பான நடிப்பின் மூலம் மெருகேற்றி,  பஞ்சாயத்தார் சொல்லுக்கு கட்டுப்பட்டு  ஊர் மக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் போது அனைவரையும் நெகிழ வைத்து கண் கலங்க வைத்து விடுகிறார்.

கதாநாயகியின் அண்ணனாக, சாதிவெறி தலைக்கேறிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பிர்லா போஸ். தாத்தா சின்ன கலிங்கனாக வரும் அழகு, அரசியல்வாதி அன்பழகனாக வரும் இமான் அண்ணாச்சி, தங்கவேலாக வரும் சூப்பர்குட் சுப்பிரமணி, கஜேந்திரனாக வரும் சேதுபதி ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

மணி அமுதவனின் பின்னணி இசையும், ஜெபி மேனின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் என்றே சொல்லலாம்.

இயக்குனர் ரமேஷ் கந்தசாமி எந்தவித குழப்பமும் இல்லாமமல் காட்சிகளை. தத்ரூபமாக உண்மை சம்பவத்தை நேரில் பார்ப்பது போன்று இயக்கி அனைவரது கண்முன் நிறுத்தியிருக்கிறார். இப்படத்தை  போரடிக்காமல் நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குனர், ”இது உண்மையில் நடந்த கதை” என்றும், ”கலப்புத் திருமணம் செய்ததால் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்ட பல ஜோடிகள் வேறு ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள்” என்றும் படத்தின் இறுதி காட்சியில் சொன்னதோடு, அந்த ஜோடிகளின் குடும்ப புகைப்படங்களை வரிசையாகத் திரையில் காட்டி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அவருக்கு பெரிய பாராட்டுக்கள்.

மொத்தத்தில், ‘அரிமா பட்டி சக்திவேல்’ படத்தை அனைவரும் பார்க்கலாம்.