Take a fresh look at your lifestyle.

’தமிழ்க்குடிமகன்’ விமர்சனம்

92

நடிகர்கள் : சேரன், லால், ஸ்ரீபிரங்கா, துருவா, தீபிக்‌ஷா, அருள்தாஸ், வேல ராமமூர்த்தி
இசை : சாம்.சிஎஸ்
ஒளிப்பதிவு : ராஜேஷ் யாதவ்
இயக்கம் : இசக்கி கார்வண்ணன்
தயாரிப்பு : லக்‌ஷ்மி கிரியேஷன்ஸ்

சலவைத்தொழில் மற்றும் மயானத்தில் உடல்களை அடக்கம் செய்யும் தொழிலை செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் சேரன், அத்தொழிலையும், அத்தொழில் செய்பவர்களையும் ஊர் மக்கள் இழிவாகப் பார்ப்பதால் அப்படிப்பட்ட தொழிலே தனக்கு தேவையில்லை என்று முடிவு செய்து, வேறு ஒரு தொழிலில் இறங்குகிறார். ஆனால், எந்த நிலைக்கு போனாலும் சரி, எப்படி மாறினாலும் சரி, இன்னார் இந்த தொழிலை தான் செய்ய வேண்டும் என்ற மனநிலையோடு ஊர் மக்கள் சேரனுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுக்கிறார்கள். அவற்றை சமாளித்து தனது நிலையை மாற்றியே தீருவேன் என்ற போராட்ட குணத்தோடு சேரன் பயணிக்கிறார்.

இதற்கிடையே ஊர் பெரியவர் இறந்துவிட, அவரது உடலை அடக்கம் செய்ய சேரனை அழைக்கிறார்கள். அவர், இனி அந்த தொழிலை நான் செய்யப்போவதில்லை என்று மறுக்கிறார். தங்களை மீறி சேரன் இயங்குவதை சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதியினர் அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அப்போது, இந்த விவகாரத்தில் சட்டம் தலையிட, பிரச்சனை நீதிமன்றத்திற்குப் போகிறது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் சேரன் பிரச்சனைக்கு மட்டும் ஒன்றி ஒட்டு மொத்தமாக சாதி பாகுபாட்டினால் சிக்கி தவிக்கும் மக்களின் நிலை மாறுவதற்கான தீர்வு ஒன்றை கொடுக்கிறது, அது தான் ‘தமிழ்க்குடிமகன்’.

நாயகனாக நடித்திருக்கும் சேரனின் பாவப்பட்ட முகம் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, அவருடைய பக்குவப்பட்ட நடிப்பு கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. தனக்கு விருப்பம் இல்லாத தொழிலை செய்யச் சொல்லி ஊர் மக்கள் வற்புறுத்தும் போது முடியாது என்று தைரியமாக சொல்வதும், எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் தனது மண்ணை விட்டு செல்ல மாட்டேன் வைராக்கியமாக இருக்கும் காட்சிகளில் சேரனின் நடிப்பு கம்பீரமாக இருக்கிறது.

அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் ஆதிக்க சாதியினரின் ஆணவத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார் லால். தந்தைக்கு நடக்க வேண்டிய இறுதிச் சடங்கு நடக்க முடியாமல் போவதால் இறுதியில் அவர் கலங்கும் இடம் வில்லனாக இருந்தாலும், அவர் மீது இரக்கம் ஏற்பட வைக்கிறது.

சேரனின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா, தங்கையாக நடித்திருக்கும் தீபிக்‌ஷா, வேல ராமமூர்த்தி, அருள்தாஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், ரவி மரியா, துருவா, சுரேஷ் காமாட்சி, மு.ராமசாமி, மயில்சாமி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின் கேமரா காட்சிகளை மட்டும் இன்றி மனித உணர்வுகளையும் பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறது.

சாம் சிஎஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு பயணித்திருக்கிறது.

படத்தில் காட்சிகளை விட கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் தான் அதிகம் என்பதால், அனைத்தையும் அளவாக தொகுத்திருப்பதோடு, கதையின் போக்கு மாறாமல் நேர்த்தியாக படத்தொகுப்பு செய்திருக்கிறார் சுதர்ஷன்.

பட்டியலின சமூகத்தினருக்கு ஆதரவான படம் என்று சொல்வதை விட அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், வலிகளையும் சொல்லும் விதமாக படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் இசக்கி கார்வண்ணன், இந்த நிலை மாற வேண்டுமானால் ஒட்டு மொத்தமாக சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார். அது எப்படி முடியும்? என்ற கேள்விக்கும் அவர் விடை சொல்வதோடு, இதை அரசு நினைத்தால் மட்டுமே செய்ய முடியும் என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

சாதியை காரணம் காட்டியோ அல்லது ஒருவர் செய்யும் தொழிலை காரணம் காட்டியோ அவரை இழிவாகப் பார்க்க கூடாது, என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கும் இயக்குநர் இசக்கி கார்வண்ணன், அந்த நிலை மாற வேண்டும் என்றால் என்ன? செய்ய வேண்டும் என்ற தீர்வை அனைத்து சாதியினரும் ஏற்றுக்கொள்ளும்படி சொல்லியிருக்கும் இந்த ‘தமிழ்க்குடிமகன்’ அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங் 3.5/5