Take a fresh look at your lifestyle.

பிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண்

103

ஃபேஷன் ஐகானான ராம் சரண்

இன்று இந்திய திரையுலகம், தெலுங்கு திரையுலகத்தை வியந்து பார்க்கும் காலகட்டம் இது. பிரம்மாண்டமான படைப்புகளால் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் தெலுங்கு திரையுலகம், அதில் பணியாற்றும் கலைஞர்களும் தங்களை சர்வதேச அளவில் உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் நவீன பாணியிலான உடைகளை அணிந்து சிறப்பாக தோன்றும் நட்சத்திரங்களைப் பட்டியலிட்டு, அவர்களை பாராட்டும் மரபும் ஹாலிவுட்டில் உண்டு. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும் சிவப்பு கம்பள வரவேற்பில் தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஆடையுடன் தோன்றிய நட்சத்திரங்களின் பட்டியலில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் இடம் பிடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு பலர் சமூக ஊடகங்களில் மூலமாகவும், நேரிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அண்மையில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் எனும் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் நட்சத்திர நடிகர்களும், நடிகைகளும், கலைஞர்களும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளுடன் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ராம்சரண், அவர் அணிந்திருந்த தனித்துவமான வடிவமைப்புடன் கூடிய ஆடைக்காக, ‘சிறந்த ஆடை அணிந்து விழாக்களில் கலந்து கொள்ளும் நட்சத்திர நடிகர்’களின் பட்டியலில் முதல் பத்து இடத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் இந்திய நடிகர் இவர் தான் என்பது தனி சிறப்பு.

ராம் சரண் தன்னுடைய நடிப்பில் மட்டுமல்லாமல், கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்விலும் பிரத்யேகமான ஸ்டைலுடன் கூடிய ஆடையை அணிவதில் அலாதி விருப்பம் கொண்டவர். கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொள்வதற்காக உலக அளவில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான தருண் தஹிலியானி மற்றும் அவரது குழுமத்தின் தயாரிப்பில் உருவான ரீகல் மினிமலிஸ்ட் ஃபேஷன் பாணியில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தார். அத்துடன் பேஷன் ஆடைகளை அணிவதில் தனித்துவமான அடையாளமாகவும் இவர் திகழ்கிறார்.

ராம் சரண்- தான் அணிந்து கொள்ளும் ஆடைகளுக்கான தேர்வில் எப்போதும் முழுமையான கவனத்துடன் இருக்கிறார். நம்முடைய பாரம்பரியமான பழமொழியில் சொல்ல வேண்டும் என்றால், ‘ஆள் பாதி; ஆடை பாதி’ என்பதை நிரூபிக்கும் வகையில் இவர் அணியும் ஆடையை எப்போதும் தனித்துவமாகவும், சிறப்பானதாகவும், பிரத்யேகமானதாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், நவீன பாணியுடன் ‘பேஷன் ஐகானா’கவும் செயல்படுகிறார்.