Take a fresh look at your lifestyle.

கட்டா குஸ்தி 2 விமர்சனம்

6

ஐசரி கே கணேஷ் & விஷ்ணு விஷால் தயாரிப்பில் செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெட்சுமி, கருணாஸ், யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், கருணாகரன், முனீஸ்காந்த் காளி வெங்கட் ஜாரா, மோக்ஷா, மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் கட்டா குஸ்தி 2.

2022ம் ஆண்டு வெளிவந்த ‘கட்டா குஸ்தி’ படத்தின் இரண்டாம் பாகமாக வந்திருக்கும் படம்.

கதை

பாலக்காட்டைச் சேர்ந்த குஸ்தி வீராங்கனையான ஐஸ்வர்ய லெட்சுமியை, கோயம்பத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த படிக்காத விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொண்டதுதான் முதல் பாகக் கதை.

மனைவி ஒரு குஸ்தி வீராங்கனை என்பதே தெரியாமல் திருமணம் செய்து கொண்டவருக்கு ஒரு கட்டத்தில் தெரிந்துவிட அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் முதல் பாகத்தின் கதையாக இருந்தது.

இந்த இரண்டாவது பாகத்தில் கணவர் விஷ்ணு விஷால் ‘ஹவுஸ் ஹஸ்பென்ட்’ ஆக இருக்க, மனைவி ஐஸ்வர்யா குஸ்தி பயிற்சியைப் பெற்றுக் கொண்டே ரயில்வே வேலையில் இருக்கிறார். அவர்களுக்கு ஒரு குட்டி மகள்.

தென்னிந்திய அளவிலான போட்டிக்கான பயிற்சியில் ஐஸ்வர்யா இருக்க, அவரது கோச் சதியில், என்னவென்றே தெரியாமல் தினமும் சாப்பாட்டில் போதை மருந்தைக் கலந்து கொடுக்கிறார் விஷ்ணு விஷால். அந்தப் போட்டியின் முதல் சுற்றிலேயே ஐஸ்வர்யா தோற்றுப் போக, அவருக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்படுகிறது.தனக்கு எதுவுமே தெரியாது என விஷ்ணு விஷால் சொல்ல, அதைக் காதில் வாங்காத ஐஸ்வர்யா கணவரை விட்டுப் பிரிந்து செல்கிறார். மேலும், விவாகரத்து கேட்டு வழக்கும் தொடுக்கிறார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நகைச்சுவை நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் மீண்டும் அசத்தியுள்ளார் விஷ்ணு விஷால்.
ஐஸ்வர்ய லெட்சுமியை தமிழ் சினிமா இன்னும் அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தப் படத்தைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். கோபம், பாசம், கவலை, வீரம் என ஐஸ்வர்யாவின் நடிப்பு படம் முழுவதும் அம்சமாக உள்ளது.
விஷ்னுவின் குட்டி மகள். ஒவ்வொரு காட்சியிலும் அப்படி ஒரு நடிப்பு. ஜாரா படம் முழுவதிலும் நம் மனதை கொள்ளை கொண்டு போகிறார்.
ஸ்கூல் டீச்சர் மோக்ஷா,
கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன்
நீதிபதியாக சிறப்புத் தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன், போட்டி வர்ணனையாளராக சிறப்புத் தோற்றத்தில் யோகிபாபு காளி வெங்கட் என இதில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். KM பாஸ்கரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.

முதல் பாதில் அப்பா மகள் பாசம், கணவனின் ஹவுஸ் ஹஸ்பென்ட் வேலைகள் என கலகலப்பாக நகர்கிறது. இடைவேளைக்குப் பிறகு அப்பாவைப் பிரிந்து இருக்க முடியாத மகள், கணவனை விட்டுப் பிரிந்து செல்லும் மனைவி, விவாகரத்து வழக்கு என கொஞ்சம் சீரியஸாகச் செல்கிறது. இருந்தாலும் ஆங்காங்கே சரியான, தேவையான இடங்களில் நகைச்சுவைக் காட்சிகளை வைத்து படத்தை முழுவதுமாக ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் செல்ல அய்யாவு. பாராட்டுக்கள்.

கலகலப்பான, குடும்பத்துடன் பார்க்கத் தகுந்த ஒரு படம்.

மதிப்பெண் 4/5