Take a fresh look at your lifestyle.

EXAM – வெப் சீரிஸ் விமர்சனம்

19

புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் A. சற்குணம் இயக்கத்தில்
துஷாரா விஜயன்,அதிதி பாலன், அப்பாஸ், துரை சுதாகர் மற்றும் பலர் நடித்து , அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியிருக்கும் தொடர் EXAM.

கதை

உதகம் மலை பகுதியில் உள்ள தைக்காராவுக்கு உயர் போலீஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்க வரும் மரமல்லி என்ற பெண் போலீஸ் அதிகாரியை (அதிதி பாலன்), வழியில் கடத்தும் ஜான்சி ( துஷாரா விஜயன்), தனது ஆட்கள் சிலர் உதவியோடு அவரை ஓர் இடத்தில் அடைத்து வைத்துவிட்டு, மரமல்லியாகப் பதவி ஏற்கப் போகிறாள். . பத்து நாட்களுக்குள் ஜான்சி மரமல்லியாக செயல்பட்டு ஒரு பெரிய சதியை முறியடிக்க வேண்டி இருக்கிறது.

எத்தனையோ குடும்ப ஏழைப் பிள்ளைகள் ஒரு அரசு வேலைக்குப் போனால் தலைமுறையே முன்னேறி விடும் என்ற எண்ணத்தில் கஷ்டப்பட்டு உயிரைக் கொடுத்து படித்து அரசாங்க வேலைக்கான தேர்வுகளை எழுதுகின்றனர்.

ஆனால் பணம் மட்டுமே உள்ள நபர்கள் RPSC (ரீஜனல் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ) என்ற அந்த நாடு தழுவிய தேர்வில் கூட பணம் கொடுத்து பதவிக்குப் போய் விடுகின்றனர். எல்லா தடைகளையும் கட்டுப்பாடுகளையும் மீறி பணத்துக்காக இதை செய்து தகுதிவாய்ந்த எளிய பிள்ளைகள் வயிற்றில் அடிக்க, அரசாங்கத்தின் பல்துறை ஆட்களும் சில புரோக்கர்களோடு இணைந்து அநியாயத்துக்கு துணை போய் கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். இதனால் தகுதியான பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள்.

இதற்கு துணை போகும் மரமல்லியை அடைத்து வைத்து விட்டு அந்த இடத்துக்கு போய் அநியாயத்தை தடுக்க முயலும் ஜான்சிக்கு என்ன ஆனது? பாதிக்கப்படும் தகுதியான மாணவர்கள் கதி என்ன ஆனது என்பதே இந்த ஏழு அத்தியாயத் தொடர்.

துஷாரா விஜயன், அதிதி பாலன், வசுந்தரா. சி, நரேன் மணி என இந்த தொடரில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒரு ஜெயிலர் கேரக்டரில் அப்பாஸும் , ஒரு போலீஸ் அதிகாரி கேரக்டரில் துரை சுதாகரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
அருண் அமரேந்திரனின் ஒளிப்பதிவு தொடருக்கு பலம். சாம் சி எஸின் இசை ரசிக்கவைக்கிறது.ரிச்சர்ட் கெவினின் எடிட்டிங் ஷார்ப்.
அதிதி பாலன் – துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட சண்டைக்காட்சிகளை சிறப்பாக எடுத்துள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் .

அண்மையில் TNPSC தேர்வில் நடந்த குளறுபடிகள், இப்போது நீட் தேர்வில் நடந்த அயோக்கியத்தனம் இவற்றால் தகுதி வாய்ந்த ஏழை மாணவர்களின் உழைப்பு வீணாக்கப்பட்டு இருக்கும் இந்த சூழலில் இந்த எக்ஸாம் வெப் தொடர் மிக முக்கியமான ஒன்றாகிறது.

இப்படி ஒரு விழிப்புணர்ச்சி விஷயத்தை சிறப்பாக சொல்லி இருக்கும் இயக்குநர் A. சற்குணத்திற்கு பாராட்டுக்கள்.

மதிப்பெண் 4/5