நாராயணன் PA இயக்கத்தில் அர்ஜூன் பிரபாகரன், ஆரத்யா, சுப்ரமணியம் சிவா, முனீஸ்காந்த், சரவண சுப்பையா, சுருளி, காயத்ரி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் பேட்டில்.
கதை
ராப் பாடகாராக சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழும் நாயகன் அர்ஜுன் பிரபாகரனும், தனியார் பள்ளி ஆசிரியையான நாயகி ஆராத்யாவும் காதலிக்கிறார்கள். அர்ஜுன் பிரபாகரனின் லட்சியம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு கிடைக்க, அதை சரியாக பயன்படுத்தி பெரிய ராப் பாடகராக ஆகி வசதியானவராகவும் ஆகிறார். இவருக்கு வாய்ப்பு கொடுத்தவர்ளும் பணக்கார்களாகின்றனர், இந்தஜசூழ்நிலையில் வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கிறது.
அதே சமயம் ஆராத்யா பணிபுரியும் பள்ளியில் நடக்கும் மோசடியால் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். பள்ளியில் நடக்கும் மோசடியை ராப் பாடல் மூலம் உலகிற்கு தெரியப்படுத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற ஆராத்யாவின் விருப்பத்தை அர்ஜுன் பிரபாகரன் நிறைவேற்ற முடிவு செய்கிறார். ஆனால், அவரது இந்த முயற்சிக்கு தங்களது வளர்ச்சியை பாதிக்கும் என்று நினைக்கும் இசை நிறுவனம் அதற்கு முட்டுக்கட்டை போடுவதோடு, அவரை மிரட்டவும் செய்கிறது. மறுபக்கம் தனியார் பள்ளி தலைவர் சுப்பிரமணிய சிவா, ஆராத்யாவை கொலை செய்ய முயற்சி செய்கிறார். இவர்களையும், இவர்கள் மூலம் வரும் பிரச்சனைகளையும் சமாளித்து, தாங்கள் நினைத்ததை காதல் ஜோடி வெற்றிகரமாக செய்து முடித்ததா? இல்லையா?, என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் அர்ஜுன் பிரபாகரன் ராப் பாடகராக நடிப்பிலும் சண்டைக்காட்ஙிகளிலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக ஆரத்யா, அழகாலும் நடிப்பாலும் நம்மை கவர்கிறார்.
வில்லனாக சுப்பிரமணிய சிவா மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சரவண சுப்பையா, அரசியல்வாதியாக நடித்திருக்கும் முனிஷ்காந்த், சுருளி, காயத்ரி என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
யுவராஜ்.ஆரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
ஜீவாவின் இசையில் ராப் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
இன்றைய காலக்கட்டத்தில் கல்வியை வியாபாரமாக மட்டுமே பார்க்கும் சில தனியார் பள்ளிகளினால் மாணவர்கள் எதிர்காலம் எப்படி பாழாகிறது என்பதையும், அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் எப்படி கொத்தடிமைகள் போல் நடத்தப்படுகிறார்கள், என்பதையும் தைரியமாக பேசியிருக்கும் இயக்குநர் நாராயணன்.பி.ஏ, பாராட்டுக்கள்.
மதிப்பெண் 2.5/5