Take a fresh look at your lifestyle.

ஜி.வி. பிரகாஷ் குரலில் பிரதமர் மோடி ரசித்த திருவாசகம் முதல் பாடல், ஜனவரி 22ல் வெளியாகிறது !!

5

பிரதமர் மோடி முன்னிலையில் மெய்சிலிர்க்க வைத்த திருவாசகம் – ஜனவரி 22ல் ஜி.வி. பிரகாஷ் வெளியிடும் முதல் பாடல் !!

தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம். அதன் முதல் பாடல், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்களால் வரும் ஜனவரி 22 ஆம் தேதி அவரது அதிகாரப்பூர்வ YouTube சேனலில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் முன்னிலையில் அவர் இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

பொங்கல் விழாவின் ஆன்மிகமும் தமிழ்ச் சுவையும் கலந்த அந்த காலை நேரம், தமிழ் உணர்வோடு ஒலித்த திருவாசக இசை நிகழ்ச்சியால், தனித்துவம் பெற்றது. பிரதமர் மோடி நேரில் அமர்ந்து இந்த இசையை ரசித்தது, நிகழ்வின் பெருமையை மேலும் உயர்த்தியது. ஜி.வி. பிரகாஷின் குரலும் இசையும், திருவாசகத்தின் ஆழ்ந்த பக்தி உணர்வை சமகால இசை மொழியில் வெளிப்படுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.

நவீன இசையில் பாரம்பரியத்தின் அம்சத்தை இணைப்பதில் தேர்ச்சி பெற்றவர் ஜி.வி. பிரகாஷ். திரைப்பட இசை, தனிப்பாடல்கள், சர்வதேச மேடைகள் என பல தளங்களில் தனது தனித்த குரலை பதித்துள்ள அவர், திருவாசக முயற்சியின் மூலம் தமிழ் ஆன்மிக இசைக்கு புதிய அடையாளம் அளிக்க முனைந்துள்ளார்.

திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க வேண்டும் என்பது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவு. அந்த கனவின் முதல் படியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு இசையமைத்து, அவற்றை உலகிற்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாரம்பரிய ஆன்மிகப் பாடல்களை இன்றைய தலைமுறைக்கும் எளிதாக உணரச் செய்யும் வகையில், இசை வடிவமைப்பில் புதிய அணுகுமுறையை அவர் கையாண்டுள்ளார்.

இந்த முயற்சியின் தொடக்கமாக, மோடி முன்னிலையில் பாடப்பட்ட திருவாசகத்தின் முதல் பாடல் வரும் ஜனவரி 22 அன்று ஜி.வி. பிரகாஷ் தனது YouTube சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார். பிரதமர் மோடி அவர்களின் பாராட்டைப் பெற்றுள்ள இந்தப் பாடல், ஆன்மிக இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.