Take a fresh look at your lifestyle.

இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுக்கு புதிய ஒளி

6

கட்டணமில்லா vvvsi.com வேலை வாய்ப்பு இணையதளத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி*

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், படித்த இளைஞர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும் எதிர்கால நிச்சயமும் விதைத்து வரும் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், வேலைவாய்ப்பு சேவையை ஒரு சாதாரண தகவல் பரிமாற்றமாக அல்லாமல், கட்டணமில்லா மனிதநேய சமூகச் சேவையாக மாற்றி சாதனை படைத்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாக, நேரடி நிறுவனங்களிடமிருந்து வேலைவாய்ப்பு தகவல்களைப் பெற்று, அந்த வாய்ப்புகளை நகர எல்லைகளைத் தாண்டி, கடைசி கிராமங்கள் வரை கட்டணமின்றி கொண்டு சேர்த்ததின் பயனாக, இதுவரை வேலைவாய்ப்பை அணுக முடியாத நிலையில் இருந்த முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வாழ்க்கையை மாற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தர இந்த இயக்கம் முக்கிய பங்காற்றி வந்துள்ளது. இதன் மூலம், பல குடும்பங்களில் பொருளாதார நிலைத்தன்மையும், சமூக முன்னேற்றமும் உருவாகியுள்ளது.

இதுவரை, இந்த இயக்கத்தின் மூலம் 34,000-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, எந்தவித கட்டணமும் இன்றி, 2 லட்சத்து 17 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை தனியார் நிறுவனங்களில் பெற்றுத்தந்துள்ளது என்பது, இந்த இயக்கத்தின் சேவை வீச்சையும், நம்பகத்தன்மையையும், நேர்மையையும் வெளிப்படுத்தும் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

இந்த சேவையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் உயரிய நோக்குடன், வேலை தேடும் இளைஞர்களையும், வேலை வழங்கும் நிறுவனங்களையும் கட்டணமின்றி ஒரே தளத்தில் நேரடியாக இணைக்கும் வகையில், vvvsi.com என்ற புதிய வேலைவாய்ப்பு இணையதளம் இன்று மதுரையில் இருந்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த இணையதளத்தை சமூக அக்கறையும் மனிதநேயப் பொறுப்பும் கொண்ட நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தொடங்கி வைத்து,

“ஒரு இளைஞனுக்கு வேலை கிடைப்பது என்பது அவன் குடும்பத்தின் எதிர்காலமே மாறுவது போன்றது. அந்த மாற்றத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக, கட்டணமின்றி, வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் தொடர்ந்து ஒரு உறுதியான பாலமாக இருந்து வருகிறது” என மனதார பாராட்டினார்.

மேலும், அந்த இயக்கத்தின் தலைவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின்போது, இயக்கத்தின் ஊழியர்கள், தன்னார்வலர்கள், அறங்காவலர்கள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர். நிகழ்விற்கான ஒருங்கிணைந்த ஏற்பாடுகளை, இயக்கத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் வீரராஹவன் அவர்கள் முன்னின்று செய்திருந்தார்.


மனிதநேய சிந்தனையும், வள்ளலார் வழியிலான கருணை, சமத்துவம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட இந்த கட்டணமில்லா வேலைவாய்ப்பு இணையதள முயற்சி, இனி தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நம்பிக்கையின் புதிய வாசலாக திகழும் என சமூக ஆர்வலர்களும் இளைஞர்களும் ஆழ்ந்த நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.