Take a fresh look at your lifestyle.

*நடிகர் விவேக் பிறந்தநாளை முன்னிட்டு பி டி செல்வகுமாரின் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி… ஏராளமான பெண்களுக்கும் காமெடி நடிகர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்!*

3

*நடிகர் விவேக் பிறந்தநாளை முன்னிட்டு பி டி செல்வகுமாரின் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி… ஏராளமான பெண்களுக்கும் காமெடி நடிகர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்!*


பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த ‘புலி’ படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அந்த வகையில் சினிமா மூலம் சமூக அக்கறை கருத்துக்களை எடுத்துச் சொன்ன ஜனங்களின் கலைஞன் விவேக் பிறந்த நாளை முன்னிட்டு இளம் விதவைகள் உருவாவதை தடுப்பதை நோக்கமாக கொண்ட நிகழ்ச்சிக்கு கலப்பை மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.

சென்னை விருகம்பாக்கம் ஏவி எம் பார்க் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற போதைக்கு எதிரான வாசகங்களை உரக்கச் சொன்னபடி விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. நலிந்த காமெடி நடிகர்களுக்கும் நூற்றுக்கணக்கான பெண்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய பி டி செல்வகுமார், ”ஒரு நலத்திட்ட நிகழ்ச்சி நடத்துறோம்னா நாலு பேருக்கு நோட் புக், பென்சில் கொடுக்கிறதோட நிறுத்திக்கலாம்னு யோசிக்கிற ஆள் இல்லை. செய்றதை கொஞ்சம் விரிவா, சமூக அக்கறையோட செய்யணும்னுதான் முடிவெடுப்பேன். அப்படித்தான் கன்னியாகுமரியில பல அரசுப் பள்ளிகளுக்கு கலையரங்கம் கட்டிக் கொடுத்தோம்; வகுப்பறை கட்டிக் கொடுத்தோம். எங்களோட சமூகப் பணிகள் பற்றி நாங்க சொல்லணும்னு இல்லை. கல்வெட்டுக்கள் சொல்லும். அந்த வகையில சினிமா மூலமா மூட நம்பிக்கை கருத்துக்களை எடுத்துச் சொன்ன அண்ணன் விவேக் அவர்களோட பிறந்தநாள்ல இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சோம்

ஒரு பெண் பத்திரிகையாளர், ராஜேஸ்வரின்னு பேரு. அவங்க நான் கட்டிக் கொடுத்த கலையரங்குகள், வகுப்பறைகள், விளையாட்டுத் திடல்கள் பற்றியெல்லாம் எடுத்துக்காட்டி, அது மாதிரி வேறு யாராச்சும் செய்திருக்காங்களான்னு கூகுள்ல பார்த்தா இந்திய அளவிலேயே யாரும் இல்லைன்னு சொல்லி பெருமைப்படுத்தியிருக்காங்க. அந்தளவுக்கு எங்களோட சேவைகள் பரந்து விரிஞ்சிருக்கு.

எனக்கு பத்து வீடு இருக்குன்னு ஒருவர் சொல்லியிருக்கார். அப்படியே இருந்தாத்தான் என்ன? சின்ன வீடு வெச்சிருந்தாதான் தப்பு. எனக்கு 10 வீடு இருக்குனு நிரூபிச்சிட்டா 8 வீடடை அவர் பேர்ல எழுதி வைக்கிறேன். பேசணும்னா யாரு வேணாலும் என்ன வேணாலும் பேசலாம். ஆனா, உழைச்சாத்தான் எதையும் அடைய முடியும்.

நான் எஸ் ஏ சந்திரசேகர் சார்கிட்டேயும் விஜய் சார்கிட்டேயும் பல வருடம் வேலை பார்த்திருக்கேன்னு பலருக்கும் தெரியும். 200 படங்களுக்கு பி ஆர் ஓ’வா வேலை பார்த்திருக்கேன். 122 படங்களை ரிலீஸ் டிஸ்ட்ரிபியூட்டரா இருந்து ரீலீஸ் பண்ணிருக்கேன். நான் தயாரிச்சு விஜய் நடிச்ச ‘புலி’ படத்தை ரிலீஸ் செய்ய விடாம தடுக்கிறதுக்காக ரெய்டு வர வெச்சாங்க. என்னை ஹவுஸ் அரஸ்ட் பண்ணாங்க. என்கிட்டே அன்னிக்கு வெறும் 2000 ரூபாய்தான் இருந்துச்சு. அப்படியான நெருக்கடிகளையும் சந்திச்சிருக்கேன்.

பல நாள் துக்கமில்லாம உழைச்சிருக்கேன். இப்போகூட எனக்கு ஆபரேசன் நடந்துச்சு. மூணு மாசம் ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னதையும் தாண்டித்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தறேன். நான் திடுதிப்னு வளரல. எல்லாத்துக்கும் பின்னாடி கடுமையான உழைப்பு இருக்கு. 

என்னை விஜய் சார்க்கிட்டேயிருந்து பிரிக்கிறதுக்காக ஒரு நபர் எல்லா விஷயத்தையும் பண்ணார். அந்த சகுனி, துரோகி இப்போவும் விஜய்கிட்டே இருக்கார். விஜய் நான் வளர்த்த மரம்; நான் தண்ணி ஊத்தி வளர்த்திருக்கேன். அவரு இன்னும் நல்லா வளரணும். அதுக்கு சகுனிகளை, துரோகிகளை விலக்கிவெச்சுட்டு கூட நல்லவர்களை கூட வெச்சிக்கணும். அப்போதான் விஜய் இன்னும் நல்லா வளர முடியும்” என்றார்.

நிகழ்வில் பத்திரிகையாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருவது பற்றி கேட்டதற்கு, ”அவர் அப்படி பேசி வருவது உண்மைதான். அவரது பேச்சால் தொண்டர்கள் பலியாகிவிடக் கூடாது. விஜய் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்” என்றார். பத்திரிகையாளர்களால் அரசியல் சார்ந்த பல கேள்விகள் கேட்கப்பட, பி டி செல்வகுமார் காரசாரமாக பதிலளித்தார்.

நடிகர் விவேக்கின் சமூக சேவைகளில் மரக்கன்று நடுவது முதன்மையானதாக இருந்தது. அதை நினைவுகூறும் விதமாக இன்று நடந்த நிகழ்வில் பலருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மூத்த திரைப்பட பத்திரிகையாளர் மீரான் பி டி செல்வகுமாரின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் அவர் செய்துவரும் மக்கள் நலப்பணிகள் பற்றியும் நடக்கவிருக்கும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கத்தையும் எடுத்துச் சொல்லி நிகழ்வை துவங்கி வைத்தார்.

கலப்பை மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி கே வெங்கடேஷ் தனது துவக்க உரையில், கலப்பை மக்கள் இயக்கம் கஜா புயலின்போது, கொரோனோ பாதிப்பின்போது ஏழை எளிய மக்களுக்கு செய்த உதவிகள், கன்னியாகுமரியில் அரசுப் பள்ளிகளுக்கு வகுப்பறைகளும் கலையரங்குகள் கட்டிக் கொடுத்த பணிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்து, இனி சென்னையிலும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வது தொடரும் என்றார். ‘உங்கள் குடும்பத்திலோ, உங்களுக்கு தெரிந்தவர்களின் குடும்பத்தில் யாரேனும் போதைக்கு அடிமையானவர்கள் இருந்தால் அவர்களைப் பற்றி தெரியப்படுத்தினால் மறு வாழ்வு மையங்கள் மூலம் சிகிச்சையளித்து மீட்டெடுக்கும் நற்பணியை முன்னெடுத்துச் செய்வோம்’ என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்வில் காமெடி நடிகர்கள் பாவா லெஷ்மணன், அம்பானி சங்கர், சின்ராசு, ஜெய்கணேஷ், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளைப் பெற்றனர்.

கலப்பை மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ராஜ்குமார், விருகம்பாக்கம் பகுதி நிர்வாகி திவாகர் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.